சென்னை: ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மோகன், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் கோட் (The Greatest of all time). யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகியுள்ள கோட் படத்தின் டிரெய்லர் சில நாட்களுக்கு முன் வெளியானது. கோட் டிரெய்லர் அனைத்து தரப்பு சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும், கோட் படம் டிரெய்லரை வைத்து ரசிகர்கள் பலர் தன் பங்கிற்கு பல்வேறு கதைகளை சமூக வலைத்தளங்களில் கூறி வருகிறார்கள்.
கோட் படத்தின் பாடல்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெறாத நிலையில், டிரெய்லர் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது என கூறலாம். அதேபோல், கோட் படத்தின் ஸ்பார்க் (Spark) பாடல் வெளியான போது அப்பாடலில் விஜய் சிறியவராக தோன்றியுள்ள காட்சிகள் கடும் விமர்சனத்திற்குள்ளானது. அதே நேரத்தில், டிரெய்லரில் சிறிய வயது விஜய் தோன்றும் காட்சிகள் ஏஐ (AI tech) தொழில்நுட்பம் மூலம் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் பாராட்டினர்.