சென்னை:தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்ட நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் தற்போது இவரின் 50வது திரைப்படமான மகாராஜா இன்று (ஜூன் 14) உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தை குரங்கு பொம்மை படத்த இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் இயக்கியுள்ளார்.
மகாராஜா திரைப்படம் இன்று காலை முதல் திரையரங்குகளில் வெளியான நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு திரையரங்குகளில் விஜய் சேதுபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் விஜய் சேதுபதி நடித்த 50வது திரைப்படம் மகாராஜா இன்று வெளியானது. திரையரங்கில் வெளியிடப்பட்ட முதல் காட்சியை நடிகர் விஜய் சேதுபதி ரசிகர்களோடு கண்டு களித்தார்.
திரையரங்கிற்கு வருகை தந்த விஜய் சேதுபதிக்கு ரசிகர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், ரசிகர்களுடன் சேர்ந்து திரைப்படத்தை பார்த்த விஜய்சேதுபதி கேக் வெட்டி 50 வது படத்தை கொண்டாடினார். அப்போது, ரசிகர்களிடையே பேசிய அவர் 50 வது திரைப்படத்திற்கு வருகை புரிந்து ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
ரசிகர்கள் பலர் விஜய்சேதுபதியோடு செல்பி எடுத்துக் கொண்ட நிலையில், திரையங்கில் இரு சிறுமி ஓடி வந்து விஜய் சேதுபதியை மாமா என்று அழைத்தது. பின்னர், உடனே விஜய் சேதுபதி குழந்தைக்கு முத்தமிட்டார். குழந்தையும் விஜய் சேதுபதி கண்ணத்தில் முத்தமிட்டது. பின்னர் நடிகர் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிங்க: மஞ்சும்மல் பாய்ஸ் வைப்.. குணா ரீ-ரிலீஸ் - எப்போது தெரியுமா? - Guna Movie Rerelease