சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா சூப்பர்ஸ்டார் இன்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை பலர் அவருக்கு தங்களது சமூக வலைதள பக்கம் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், “பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என கூறியுள்ளார்.
அதேபோல் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அன்பு நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மென்மேலும் பல வெற்றிகள் பெறுக; நலம் சூழ்க; மகிழ்ச்சி நிறைக, நீடு வாழ்க!” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ”ஆறிலிருந்து அறுபதுவரை ரசிகர்களை கொண்டவர்”... ரஜினிகாந்துக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!
அதேபோல் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இன்று தனது 75வது அகவையில் அடியெடுத்து வைக்கும் இனிய நண்பரும், பத்மவிபூஷண், தாதா சாகெப் பால்கே விருது உட்பட பல விருதுகளுக்குச் சொந்தக்காரரும், மிகச் சிறந்த ஆன்மீகவாதியுமான 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள். ரஜினிகாந்த் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ்ந்து இன்னும் பல உயரங்களை எட்ட வேண்டுமென்று எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என கூறியுள்ளார்.