சென்னை:வித்தியாசமான கதைத்தேர்வு மூலம், தனித்த கதாபாத்திரங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் வசந்த் ரவி. இவர் ‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ரஜினிகாந்த் உடன் சேர்ந்து ‘ஜெயிலர்’ படத்தில் நடித்தார். தீவிரமான கதைக்களங்களில் நடித்து வந்த அவர், அந்த ஜானரில் இருந்து வெளியே வந்து நடித்துள்ள ஜாலியான படமாக “பொன் ஒன்று கண்டேன்” திரைப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில், இப்படம் தற்போது ஜியோ சினிமாவில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நாளை (ஏப்ரல் 18) தன் பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள வசந்த் ரவி, இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “என்னுடைய முதல் படம் ‘தரமணி’யில் இருந்து எனக்கு ஆதரவு கொடுத்து வரும் மீடியா மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன், அழைப்பை ஏற்று வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. நீங்கள் கொடுத்த நிறை, குறைகள்தான் என்னை இந்த அளவுக்கு வளர்த்துக் கொண்டு வந்திருக்கிறது.
நிறைய பேர் என்னிடம் ‘எப்போது ஜாலியான படம் செய்வீர்கள்? டான்ஸ் ஆடுவீர்கள்?’ என்றெல்லாம் கேட்பீர்கள். அதற்கான பதிலாகத்தான் ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் ஜியோ சினிமாவில் வெளியாகி உள்ளது. ‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ படங்கள் ‘ஏ’ சர்டிஃபிகேட் படங்கள். ஆனால், ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் குடும்பத்துடன் பார்ப்பதற்கு ஏற்ற படமாக அமைந்ததில் எனக்கு மகிழ்ச்சி.