சென்னை: சென்னை திருவொற்றியூர் கிராம தெருவில் தனியார் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த அக்டோபர் 25ஆம் தேதியன்று வழக்கம் போல் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்றபோது 3வது தளத்தில் 3 வகுப்பறைகளில் இருந்த மாணவ, மாணவியருக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதில், 35க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் அருகில் இருந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மாணவ, மாணவியருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது அங்கு ஏற்பட்ட வாயு கசிவாக இருக்கலாம் என்ற நிலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கடந்த அக்டோபர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பள்ளியில் காற்று பரிசோதனை நடத்தினர்.
மேலும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்து பள்ளியில் எந்தவித வாயு கசிவும் ஏற்படவில்லை எனக் கூறினர். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய சோதனையிலும் எந்த விதமான வாயு கசிவும் இல்லை என கடந்த அக்டோபர் 28ஆம் தேதி தனது அறிக்கையை சமர்பித்தது.
இந்நிலையில் கடந்த நவம்பர் 4ஆம் தேதியன்று தீபாவளி விடுமுறை முடிந்து பள்ளி மீண்டும் திறக்கப்பட்ட போது மாணவர்களுக்கு எதனால் பாதப்பு ஏற்பட்டது என பள்ளி நிர்வாகம் தெரிவிக்காத நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
இதற்கிடையில் ஏற்கனவே பாதிப்பு ஏற்பட்டு வகுப்பறையில் இருந்த மாணவர்களுக்கு மீண்டும் மூச்சு திணறல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 10 மாணவிகள் பாதிப்படைந்து அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதனால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
இதையும் படிங்க: காவல் நிலையத்திலேயே கத்தி குத்து.. தங்கையின் கணவர் மீது இளைஞர் வெறிச்செயல்.. ஆவடியில் பரபரப்பு..!
இதற்கிடையில், அரசு பொதுத் தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை பள்ளி நிர்வாகம் நடத்தி வந்தது. இந்நிலையில், சென்னை திருவெற்றியூர் மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி அதிகாரிகளும், பள்ளி நிர்வாகத்தினரும், மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டம் முடிவடைந்த நிலையில், பள்ளியில் நாளை (நவ.13) முதல் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியை இயக்க முதல் கட்டமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு மருத்துவர்கள் குழு எப்போதும் இருக்கும் வகையிலும், அவ்வப்போது மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாது, பள்ளியில் மாணவர்கள் பாதிக்கப்பட்டதற்கு என்ன காரணம்? என தெரியாத நிலையில், பள்ளியின் மொட்டை மாடியில் வளர்க்கப்பட்ட முயல்களின் எச்சத்தால் இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் எனவும், பள்ளியில் சிலர் பெண்கள் தற்காப்புக்கு பயன்படுத்தும் பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகத்திலும், காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மாணவர்களின் பெற்றோர்கள் சொன்னதன் அடிப்படையில் நாளை முதல் பள்ளியை திறந்து,10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களை நடத்த முதல்கட்டமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோட்டாட்சியர் இப்ராஹிம் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்