சென்னை: ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி அமரன் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்தின் இரண்டு பாடல்கள் ஹே மின்னலே, வெண்ணிலவு சாரல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அறிவு பாடிய ராப் பாடலும் வரவேற்பை பெற்ற நிலையில், இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. அப்போது பேசிய சிவகார்த்திகேயன், மேஜர் முகுந்த் வரதராஜன் கதை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்ததாகவும், அவரது கதையை கூற வேண்டும் என முடிவு செய்து இப்படத்தில் நடித்ததாகவும் கூறினார்.
அமரன் படத்திற்கு ஆரம்பத்தில் எதிர்பார்ப்பு குறைவாக இருந்த நிலையில், சாய் பல்லவி கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியானது முதல் எதிர்பார்ப்பு விண்ணைத் தொட்டது. பல இளைஞர்கள் அமரன் படத்தை காண வேண்டும் என ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் அமரன் படத்தின் டிரெய்லர் நாளை (அக்.23) மாலை 6 மணிக்கு வெளியாகிறது.