தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"என்னுடைய முதல் ஹீரோ எங்க அப்பா" - எமோஷ்னலான சிவகார்த்திகேயன்!

என் அப்பாவை மீண்டும் பார்ப்பதற்கான வாய்ப்பை அமரன் திரைப்படம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. கடந்த 21 வருடங்களாக எனது அப்பாவின் நினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் (Photo Credits - ETV Bharat Tamil Nadu - Raaj Kamal Films International 'X' page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2024, 11:58 AM IST

சென்னை:ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி உருவான அமரன் திரைப்படத்தை ரங்கூன் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இதில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய்பல்லவி இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இந்த இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை அன்று வெளியாகியது.

தீபாவளிக்கு வெளியான அமரன் திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரூ.100 கோடியைக் கடந்து வசூலை குவித்து வரும் இப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில், “அமரன் கதையை முதன் முதலில் கேட்கும்போது இந்த திரைப்படம் ஒரு வெற்றி படமாக அமையும் என்று எனக்கு நன்றாக தெரியும். கமல் சாருக்கு என்னை பற்றி கொஞ்சம் தான் தெரியும். ஆனா இப்போ அந்த தொலைவு கம்மியாகிவிட்டது. கமல் சார் ஊரில் இருந்து வந்து கட்டி அணைத்து என்னை பாராட்டுவார் என்ற தருணத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறேன்.

கமல் சார் தொலைபேசி மூலமாக என்னிடம் பேசும்போது, திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று அனைவரிடம் கூறுங்கள் என்று கூறினார். ராஜ்குமார் பெரியசாமி பேய் மாதிரி வேலை பார்ப்பார். அவர் தூங்கவே மாட்டார், அவர் சரியாக தூங்கி மூன்று வருடங்களுக்கு மேலாகிறது என நினைக்கிறேன். எனக்கு ரெக்கார்ட் பிரேக்கிங் திரைப்படங்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இந்த படம் நடிப்பதை பெரும் பாக்கியமாக சந்தோஷமாக உணர்கிறேன் என்றார்.

இதையும் படிங்க:ஆர்ப்பரிக்கும் அமரன்.. படக்குழுவினரை நேரில் பாராட்டிய ரஜினிகாந்த்!

தொடர்ந்து பேசிய அவர், பிரேமம் திரைப்படத்தில் வரும் மலர் டீச்சரை போன்று தமிழில் அமரன் திரைப்படம் சாய் பல்லவிக்கு ஒரு நல்ல பெயரை பெற்று தரும். சாய் பல்லவியுடன் நான் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி. ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து இப்படத்தில் பணியாற்றியதில் மகிழ்ச்சி. எனக்கு இந்த அங்கீகாரத்தை கொடுத்த தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி.

திரைப்படம் வெளியான பொழுது அனைவரும் அதை வாரி அணைத்துக் கொண்டீர்கள். இங்கு மட்டுமில்லாமல் ஆந்திரா, கர்நாடகா போன்ற மற்ற மாநிலங்களிலும் மிக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். தமிழ் சினிமா எனக்கு கொடுத்துள்ள இந்த வாய்ப்புக்கு கண்டிப்பாக உண்மையாக இருப்பேன். தமிழக மக்களுக்கும் உண்மையாக இருப்பேன்.

கண் கலங்கிய சிவகார்த்திகேயன்:இந்த படம் எடுக்க வாய்ப்பு கொடுத்ததற்கு முகுந்த் வரதராஜன் குடும்பத்திற்கு மிகவும் நன்றி. முகுந்த் சாருக்கும், எனது அப்பாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளது. இது மாதிரி எனது அப்பவும் ஊருக்கு வரேன்னு சொன்னாங்க. அடுத்த நாள் நான் காலேஜ் போய்ட்டு வரும்போது வீட்டில் கூட்டமா இருந்தனர். அப்பா இறந்துவிட்டார் என தெரிவித்தனர். அவரது இறுதி சடங்கில் அப்பாவோட எலும்பை பார்த்தேன். அங்க உடைந்தது அப்பாவோட எலும்பு மட்டுமல்ல, 17 வயசு பையனான என்னுடைய மனதும்தான்

இந்த படத்தோட க்ளைமேக்ஸ் மாதிரி ஜனாதிபதியிடம் எங்க அம்மா மெடல் வாங்கினார். இந்த படத்தின் மூலமாக என்னுடைய அப்பாவை நான் பார்த்துட்டேன். என் அப்பாவை மீண்டும் பார்ப்பதற்கான வாய்ப்பை அமரன் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. கடந்த 21 வருடங்களாக எனது அப்பாவின் நினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். காவல்துறை சீருடை அணிந்து ஹீரோ மாதிரி இருப்பார். அவர் தான் என்னுடைய முதல் ஹீரோ” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details