சென்னை:சங்கர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரமாண்டமாக உருவாகி உள்ள இந்தியன் 2 படம் அடுத்த மாதம் 12ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், ரிலீசுக்கு தயாராகி வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே படமாக்கி முடிக்கப்பட்டுள்ளது.
படத்தின் நீளம் கருதி இந்தியன் 2 மற்றும் 3 என இரண்டு பாகங்களாகவும் படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் கமலுடன் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் லைக்கா புரோடக்சன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று 6 மாலை அளவில், சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் சிம்பு, 'லேட்டா வந்தேன் என்று நினைக்க வேண்டாம். தக் லைஃப் (Thug Life) படப்பிடிப்பில் இருந்து வந்தேன். சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள். நான் லேட்டா வந்தேன் என்பார்கள். இந்தியன் எனக்கு ரொம்ப பிடித்த படம். கமர்ஷியல் படத்துக்கு ஒரு ஃபார்முலா வேண்டும் என்றால் இந்தியனுக்கு மேலே படம் இல்லை என்று தோன்றுகிறது.
இந்தியன் படம் எத்தனை முறை பார்த்தேன் என்று கணக்கில்லை. கமல் எனது குரு. அவரைப்பற்றி சொல்ல நிறைய இருக்கு. கமல் திரையில் குரு. அவருடன் இணைந்து நடிக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது. அந்த அனுபவம் பற்றி தக் லைஃப் மேடையில் சொல்றேன். சங்கருக்கு மக்களுக்கு பிடித்ததை செய்யும் தேடல் இருக்கிறது. கண்டிப்பாக சங்கர் நமக்கு பிடிப்பது போல்தான் பண்ணியிருப்பாரு. பெரிய படம் பண்ணுவது கஷ்டம். அவர் மூன்று படம் பண்ணியது பெரிய விஷயம் வாழ்த்துகள்.