சென்னை :கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரிஷப் ஷெட்டி. இவர் கடந்த 2022ம் ஆண்டு வெளியான காந்தாரா திரைப்படத்தின் மூலம் மிக பிரபலமானார். அதுமட்டுமின்றி மற்ற மொழிகளிலும் இப்படம் மூலம் இவர் அறியப்பட்டார். மேலும், இப்படத்தை இவரே இயக்கி, நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி, நாடு முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. பஞ்சூர்லி தெய்வத்தின் பின்னணி கொண்ட கதையாக உருவாக்கப்பட்டது காந்தாரா. சிறிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படமானது உலகளவில் வரவேற்பு பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது.
கன்னட சினிமாவில் கேஜிஎஃப் படத்திற்கு பிறகு, காந்தாரா திரைப்படம் மிகப்பெரியை வெற்றியை பெற்றுக் கொடுத்ததாக ரசிகர்கள் தரப்பு கூறுகிறது. ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த 'வராக ரூபம்..'என்ற பாடல் அனைவரின் பாராட்டையும் பெற்றது.
இதனையடுத்து, காந்தாரா திரைப்படத்தின் 100வது நாளில் காந்தாரா 2வது பாகம் தயாரிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அதாவது, Kantara A Legend: Chapter 1 என்ற தலைப்பில் காந்தாரா படத்தின் முன்கதையாக (prequel) உருவாக உள்ளதாக படக்குழு அறிவித்தது.