சென்னை: நடிகர் ரவி மோகன் நடித்து வரும் அவரது 34வது படத்திற்கு ’கராத்தே பாபு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘டாடா’ பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கி வரும் இப்படத்தின் தலைப்பை அறிவிப்பதற்காகவே ஒரு டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த டீசர் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
‘பிரதர்’, ‘காதலிக்க நேரமில்லை’ படங்களைத் தொடர்ந்து ரவி மோகன் நடிக்கும் இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் சார்பில் சுந்தர் ஆறுமுகம் தயாரிக்கிறார். தௌஃபி எஸ் ஜிவால், சக்தி வாசுதேவன், கே.எஸ். ரவிக்குமார், நாசர், விடிவி கணேஷ், சுப்ரமணியம் சிவா, கவிதாலயா கிருஷ்ணன், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்திலிருந்து ஹாரிஸ் ஜெயராஜ் விலகிய நிலையில் சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ’மேயாத மான்’ பட இயக்குநர் ரத்னகுமார் மற்றும் எழுத்தாளர் பாக்கியம் குமார் ஆகியோர் இந்த படத்தின் கதை, திரைக்கதையில் பணியாற்றுகின்றனர். எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார்
படத்தின் தலைப்பை அறிவிக்கும் டீசரில் சட்டமன்றத்தில் நடக்கும் காட்சி இடம் பெற்றிருக்கிறது. ஒரு சட்டமன்ற உறுப்பினரின் பழைய பெயரை வைத்து அரசியல் விவாதம் நடக்கிறது. அதில் எதிர்க்கட்சி தலைவரான கே.எஸ்.ரவிக்குமார் முதலமைச்சரைப் பார்த்து, ”எதற்காக அவர் எனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினரின் பழைய பெயரைத் தெரிந்து கொள்ள இவ்வளவு ஆர்வமாக இருக்கிறார், பெயரில் என்ன இருக்கிறது?” எனக் கேள்வி எழுப்ப அதற்கு முதலமைச்சரான நாசர், பெயர்கள் எத்தனை முக்கியம் என பெரிய விளக்கம் ஒன்றை கொடுக்கிறார்.