சேலம்: நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'கவுண்டம்பாளையம்'. இப்படம் நேற்று (ஆகஸ்ட் 9) வெளியான நிலையில், சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியில் உள்ள திரையரங்கம் ஒன்றில் நடிகர் ரஞ்சித் கவுண்டம்பாளையம் படம் பார்க்க வந்தார். அப்போது அவருக்கு திரையரங்க நிர்வாகம் மற்றும் திரைப்பட ரசிகர்கள் ஏராளமானோர் மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஞ்சித் கூறுகையில், "கவுண்டம்பாளையம் படத்தில் தேவையற்ற காட்சிகள் இருப்பதாக கூறி என்னை எதிர்ப்பவர்கள், இந்தப் படத்தைப் பார்க்காமல் பேசாதீர்கள். அறிவு முதிர்ச்சி இல்லாதவர்கள் எனது படத்தை பார்க்க வேண்டாம். சின்ன தயாரிப்பாளர்களை ஒருபோதும் நசுக்காதீர்கள். அவ்வாறு நசுக்கும் போது எவ்வளவு பொருள் நஷ்டம் ஏற்படுகிறது என்பது அவர்களுக்குதான் தெரியும்" என்றார்.
மேலும் "என்னை நேரடியாக எதிர்க்க முடியாமல் புறமுதுகில் குத்துவது போல் செயல்படுகிறார்கள். கவுண்டம்பாளையம் படத்தின் பெயரில் ஜாதி எதுவும் இல்லை, மேலும் தாய்மார்கள் வெறுக்கும் வகையில் ஒருபோதும் நடிக்க மாட்டேன். ஊடகங்கள் மாபெரும் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்க்க இழிவான காட்சிகளை பதிவு செய்து வருகிறார்கள்" என கூறினார்.