சென்னை: ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'லால் சலாம்' (Lal Salaam). இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை ஒட்டி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய ரஜினிகாந்த், "சமீபத்தில் ஜெயிலர் படத்தின் நிகழ்ச்சியில் காக்கா, கழுகு வைத்து ஒரு கதை கூறினேன். அந்த காக்கா, கழுகு கதையை விஜய் மீதான தாக்குதல் என்று பலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். விஜய்யின் தந்தை சந்திரசேகர் வீட்டில் தர்மத்தின் தலைவன் படப்பிடிப்பிலிருந்து விஜய்யை சிறுவனாக எனக்கு தெரியும். அப்போது அவரிடம் படித்துவிட்டு நடிகராக வேண்டும் என அறிவுரை கூறினேன்.
நான் என்றும் விஜய்யின் நலம் விரும்புபவன்; தயவு செய்து இதுபோன்று விஷயங்களை இனி கொண்டு வராதீர்கள். இதை மக்கள் போட்டியாக பார்ப்பது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.
விஜய் எனக்கு நான்தான் போட்டி என்று சொல்லி இருக்கிறார், அதே போல் தான் நானும் எனக்கு நான்தான் போட்டி. விஜய்யை சிறுவயது முதல் இருந்து எனக்கு தெரியும். அவரது கடின உழைப்பால் இன்று அவர் முன்னேறி இருக்கின்றார். விஜய் சிறிய நிலையில் இருந்து பெரிய நட்சத்திரமாக வளர்ந்து, தற்போது அரசியலில் இறங்கி சமூக நலப்பணிகளையும் செய்யவுள்ளார்.
விஜய்யை போட்டியாக நினைப்பது எனக்கும் கௌரவம் கிடையாது, மரியாதை கிடையாது. அதேபோல் தான், விஜய்க்கும் என்னை போட்டியாக நினைப்பது அவருக்கும் கௌரவம் கிடையாது, மரியாதையும் கிடையாது. நான் எப்போதும் அவருடைய நலம் விரும்புபவன். தயவு செய்து இதுபோன்ற விஷயங்களை மீண்டும் கொண்டு வராதீர்கள். இதை தெளிவாக சொல்ல விரும்பினேன்” என்று பேசியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வந்த ரஜினி, விஜய் ரசிகர்கள் சண்டைக்கு இந்த விளக்கத்தின் மூலம் ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் பேச்சு சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:Oscars 2024: 13 பிரிவுகளில் பரிந்துரை! எலைட்டை கோட்டைவிட்ட ஓபன்ஹெய்மர்! அது என்ன எலைட் பிரிவு?