சென்னை:தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவு திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடல் சென்னை ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரஜினி:இதுகுறித்து, ரஜினி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,"என்னுடைய நண்பர் டெல்லி கணேஷ் அருமையானதொரு மனிதர். அற்புதமான நடிகர். அவருடைய மறைவு செய்தி கேட்டு நான் மனம் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் காலமானார் - 1976 முதல் தொடர்ந்த சினிமா பயணம் ஓய்ந்தது!
கமல்: "டெல்லி கணேஷ் மறைந்தார் என்ற செய்தி பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது. நகைச்சுவையை நுட்பமாகக் கையாளும் அரிய குணச்சித்திர நடிகர். அவரது இடத்தை ஈடு செய்வது எளிதல்ல. அவரோடு நான் செலவிட்ட தருணங்கள் இனியவை; நினைவில் நிற்பவை. அண்ணன் கணேஷை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் மீது பற்று கொண்ட திரையுலக நண்பர்களின் வேதனையைப் பகிர்ந்து கொள்கிறேன்" என தனது எக்ஸ் பக்கத்தில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
விஜய்:இதேபோல் தவெக தலைவரும் நடிகருமான விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், "மூத்த நடிகர் டெல்லி கணேஷ், உடல்நலக் குறைவால் காலமான செய்தி வேதனை அளிக்கிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக 400 க்கும் அதிகமான திரைப்படங்களில் பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்ற அவரது திடீர் மறைவு, தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.