சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்பவர் விஜய். இவர் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கோட்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படம் வருகின்ற செப்.5 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு சார்பில் அறிவித்திருந்தது. சமீபத்தில், விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இந்த கட்சி வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் எனவும் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது அம்மா ஷோபாவின் ஆசைக்கிணங்க, சென்னை கொரட்டூரில் சாய்பாபா கோயில் ஒன்றைக் கட்டியுள்ளார். இதன் கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றுள்ளது. 8 கிரவுண்ட் நிலத்தில் பிரமாண்டமான முறையில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு வியாழக்கிழமையும் இந்த கோயிலில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் இந்த கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "அனைவருக்கும் வணக்கம். நண்பன் விஜய் கொரட்டூரில் புதியதாகக் கட்டியிருக்கின்ற சாய்பாபா கோயிலுக்கு அவரது தாயாருடன் இன்று சென்றேன்.
நான் ராகவேந்திரர் கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்யும்பொழுது அவர் கோயிலுக்கு வந்ததோடு மட்டுமல்லாமல் பாடலையும் பாடி வாழ்த்தினார். இன்று நான் இந்த கோயிலுக்கு வந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
நண்பன் விஜய்க்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கோயிலுக்குள் சென்றவுடன் தூய தெய்வீகமான அதிர்வுகள் ஏற்பட்டதை உணர்ந்தேன். அனைவரும் இந்த கோயிலுக்குச் சென்று சாய்பாபாவைத் தரிசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டு விஜய்யின் அம்மாவுடன் சென்ற வீடியோவை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க:"என்னை எதிர்பதற்காக எடுக்கப்படும் படங்களில் கிராஃப்ட் அடிப்படையில் கூட சரியாக இல்லை" - இயக்குனர் பா.ரஞ்சித்! - Director Pa Ranjith