சென்னை:தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட விலைவாசி உயர்வின் காரணமாக, சுமார் 25 கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டடு கட்டிடம் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டது.
இதற்காக, நடிகர் சங்கம் சார்பில் நிதி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன், நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் ஆகியோர் தலா ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார். மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் 50 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் தொடர்பாக சங்கத்தின் மூத்த உறுப்பினர்களிடம் ஆலோசனை நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இன்று, தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆலோசனை பெற்றனர்.
இது தொடர்பாக, தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பூச்சி எஸ்.முருகன், கருணாஸ் ஆகியோர் இன்று (ஜூலை 1) போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர்.
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் அவர்களிடம் ஆலோசனை பெறுவது வழக்கம். அந்த வகையில் அடுத்து நடத்த திட்டமிடப்பட்டுள்ள நட்சத்திர கலை விழா குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்கள். வேகமாக நடைபெற்று வரும் நடிகர் சங்க கட்டிடப் பணிகள் குறித்து ஆர்வமாக கேட்டறிந்த ரஜினிகாந்த் விரைவில் நேரில் வந்து கட்டிடப் பணிகளைப் பார்வையிட உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அவர் பாதையில்.. வெளியானது விடாமுயற்சி பர்ஸ்ட் லுக்! - Vidaamuyarchi Fist Look