சென்னை:சென்னை ஆழ்வார்பேட்டையில், சிபிஆர் கன்வென்சன் அரங்கில் தனியார் உயர்நிலைப் பள்ளியில் வேளாண்துறையில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி, அவரது மனைவியுடன் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
அப்போது நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பேசுகையில், “தமிழில் பேச வேண்டும் என்று நினைக்கிறேன். ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. இந்த இடத்தில் இருப்பதற்கு, எனது மனைவியும் இந்த பள்ளியில் படித்தார். நானும் ஒரு நாள் இந்த பள்ளிக்கு சென்றிருந்தேன்.
கடைக்குட்டி சிங்கம் படத்தின் மூலம், நான் வேளாண்மைக்குள் வந்தேன். விளைநிலங்கள் எல்லாம் இப்போது தோப்பாக மாறி வருகிறது. தொழில் சார்ந்து நகர்ந்து வருகிறது. நெல் ஜெயராமன், நம்முடைய பாரம்பரிய விதைகளை பாதுகாத்து வைத்துள்ளார். தமிழக அரசு, அதை பாதுகாத்து வைக்கும் என்று சொல்லி உள்ளது. பெற்றோர், குழந்தைகளுக்கு வேளாண்மையை அறிமுகப்படுத்த வேண்டும்.
விவசாயம் ஒரு வாழ்க்கை முறை, அதை கடந்து நாம் இப்போது வெகு தொலைவில் வந்து விட்டோம். விவசாயத்திற்கு ஆதரவு தருகிறோம் என்று சொன்னால் மட்டும் போதாது, நாமும் அதை மேற்கொள்ள வேண்டும். விவசாயம் நானும் செய்து பார்த்தேன். ஆனால், தொடர்ந்து செய்ய முடியவில்லை.
விவசாயிகள், விவசாயம் செய்வதற்கான நிறைய அறிவுத் தகவல்களை தெரிந்து வைத்துள்ளனர். ஒவ்வொரு விவசாயியும் ஒரு விஞ்ஞானிதான். நம்முடைய கலாச்சாரத்தை நாம் குறைவாக மதிப்பிடுகிறோம். வெளிநாட்டிற்குச் சென்றுதான் நமது கலாச்சாரத்தை நான் கற்றுக் கொண்டேன். அதனால்தான் நான் இந்தியா ஓடி வந்துவிட்டேன்.
விவசாயம் செய்வது, விவசாயி பற்றி, பயிரிடக்கூடிய நிலத்தை பற்றி குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதற்கு வாழ்த்துக்கள். நிறைய அன்பு இருந்தால் மட்டுமே விவசாயியாக இருக்க முடியும், அன்பை விவசாயம் மூலம் சொல்லித் தருவதை தவிர வேறு அன்பு இல்லை. தொடர்ந்து மாணவர்களுக்கு விவசாயம் சார்ந்த கல்வியை கற்றுக் கொடுங்கள், நானும் விவசாயத்தை விடுவதாக இல்லை, தொடர்ந்து முயற்சி எடுப்பேன்”.
இதையும் படிங்க:மும்பை தொழிலதிபரை கரம் பிடிக்கும் வரலட்சுமி சரத்குமார்; வைரலாகும் நிச்சயதார்த்தப் புகைப்படங்கள்!