தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"இனி உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம்" - கமல்ஹாசன் அறிக்கையால் ரசிகர்கள் அதிர்ச்சி!

kamal haasan Statement about Ulaganayagan: நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் இனி தன்னை உலக நாயகன் என அழைக்க வேண்டாம் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கமல்ஹாசன் அறிக்கை
கமல்ஹாசன் அறிக்கை (Credits - ETV Bharat Tamil Nadu, @ikamalhaasan X page)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 11, 2024, 11:25 AM IST

சென்னை: பிரபல நடிகர் கமல்ஹாசன் இனி தன்னை கமல்ஹாசன் என அழைக்க வேண்டாம் என அறிக்கை வெளியிட்டுள்ளார். நடிகரும் மக்கள் நீதி மய்யக் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கடந்த நவம்பர் 7ஆம் தேதி தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இந்நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் மீது கொண்ட அன்பினால் ‘உலக நாயகன்’ உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்து, சக கலைஞர்களாலும், ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டு சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன். உங்கள் இந்த அன்பால் நெகிழ்ந்துமிருக்கிறேன். உங்களின் பிரியத்தின் மீது எனக்கு மாறாத நன்றியுண்ர்வும் உண்டு.

சினிமாக் கலை, எந்த ஒரு தனி மனிதனையும் விட பெரியது. அந்த கலையில் மேலும் மேலும் கற்றுக் கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன் தான் நான். பிற கலைகளை போலவே சினிமாவும் அனைவருக்குமானது, அனைவராலுமானது. திறமையான கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், நல்ல ரசிகர்கள் ஒன்றிணைந்து தான் சினிமா உருவாகிறது.

கலையை விட கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை. கற்றது கைம்மண் அளவு என்பது உணர்ந்தவனாகவும், தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை கொண்டு உழைத்துயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது. அதனால் தான் நிறைய யோசனைக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வர நேர்ந்தது. மேலே குறிப்பிட்டது போன்ற பட்டங்களையும், அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்த மரியாதைக் குறைவும் வந்து விடாத வண்ணம் அவற்றைத் துறப்பது என்பதே அது.

எனவே என் மீது பிரியம் கொண்ட அனைவருக்குமாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இனிவரும் காலத்தில் என் ரசிகர்களும், ஊடக நண்பர்களும், திரைத்துறையைச் சார்ந்தவர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்களும், சக இந்தியர்களும் என்னை கமல்ஹாசன் என்றோ, கமல் என்றோ ’KH’ என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று கேட்டுக் கொள்கிறேன்.

இத்தனை காலமாக நீங்கள் என் மேல் காட்டி வரும் அன்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்கிறேன். சக மனிதன் என்கிற ஸ்தானத்திலிருந்தும், சினிமாவை நேசிக்கிற நம் அனைவரிலும் ஒருவனாகவே நான் இருக்க வேண்டும் என்கிற ஒரு எண்ணத்தில் இருந்தும் இந்த வேண்டுகோள் வெளிப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க:"எதார்த்தமான நடிப்பையும், அன்பையும் இழந்து விட்டேன்" - டெல்லி கணேஷ் மறைவுக்கு வடிவேலு இரங்கல்!

சில நாட்களுக்கு முன் வெளியான ’தக் லைஃப்’ ப்ரோமோவில் ’விண்வெளி நாயகா’ என்ற பாடல் வரிகள் இடம்பெற்றது. இதனையடுத்து கமல் ரசிகர்கள் ’உலக நாயகன் இனி விண்வெளி நாயகன்’ என கூறி வந்தனர். இதேபோல் சில வருடங்களுக்கு முன் நடிகர் அஜித்குமார் தன்னை ’தல’ என்று அழைக்க வேண்டாம் என்றும், அஜித்குமார் அல்லது AK என்று அழைத்தால் போதுமென்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details