சென்னை: லைகா தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் படம் விடாமுயற்சி. இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து படக்குழு சென்னைக்கு திரும்பியது.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் இறுதியாக கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு, இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து, கடந்த ஒரு வருட காலமாக அஜித்தின் திரைப்படம் வெளியாகவில்லை. இது அவரது ரசிகர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
விடாமுயற்சி: துணிவு படத்திற்குப் பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அப்படம் திடீரென கைவிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் தற்போது அஜித் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.
ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு அஜித் மற்றும் த்ரிஷா மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர். மேலும் இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன் தாஸ், ஆரவ், அர்ஜுன் உள்ளிட்டோரும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார்.
சென்னை வருகை: நீண்ட நாட்களாக அஜர்பைஜானில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் படக்குழு சென்னைக்கு திரும்பியது. சமீபத்தில் மறைந்த வெற்றி துரைசாமிக்கு நேரில் சென்று நடிகர் அஜித் அஞ்சலி செலுத்தினார். மேலும், கடந்த மார்ச் 2 ஆம் தேதி தனது மகன் ஆத்விக் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடினார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.