சென்னை: தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் தனது தன்னம்பிக்கை மற்றும் திறமையால் யாருடைய உதவியும் இல்லாமல் கோலிவுட்டில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் அஜித் குமார். ஆசை நாயகனாக அறிமுகமாகி அடுத்தடுத்த வெற்றிப் படங்களால் தற்போது கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகராக உள்ளார்.
சென்னையில் அஜித்குமார் 10ஆம் வகுப்பு படிப்பை முடித்தார். பின்னர் அப்பாவின் நண்பர் ஒருவர் நடத்திய எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் சூப்பர்வைசர், அதன் பிறகு சென்னிமலை, ஈரோடு நகரங்களில் இருந்து பெட்ஷீட் வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்த பிசினஸ் மேன் என அஜித்தின் ஆரம்ப கால வாழ்க்கை வித்தியாசமான பயணமாக இருந்தது.
அதன்பிறகு சில விளம்பரங்களில் நடித்த அஜித்திற்கு சினிமா வாழ்க்கை ஆரம்ப கட்டம் அவ்வளவு சுலபமானதாக இல்லை. ‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் சில விநாடிகள் வந்து போனது மூலம் அமைந்தது தான் அஜித்தின் முதல் சினிமா வாய்ப்பு.
ஆனால் அடுத்து வந்த ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு படம் தான் மிகச்சரியான அறிமுகம். 1992ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி சினிமா பயணத்தை தொடங்கிய அஜித்தின் வெள்ளித்திரைக்கு வயது 32 என எடுத்துக் கொள்ளலாம். அஜித் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டே விளம்பர படங்களிலும் நடித்து வந்தார்.
பிறகு செல்வா இயக்கத்தில் அஜித் நடித்த அமராவதி தமிழில் முதல் படமாக அமைந்தது. இதனைத்தொடர்ந்து பல்வேறு கட்டப் போராட்டத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். தமிழில் ஆசை, காதல் கோட்டை என ஆரம்ப காலங்களில் பல காதல் படங்களில் நடித்து வந்த அஜித்திற்கு வாலி படம் திருப்புமுனையாக அமைந்தது. வாலி படத்தில் சினிமாவில் ஆரம்ப கட்டத்தில் எந்த நடிகரும் ஏற்று நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில் அஜித்குமார் நடித்து பெயர் பெற்றார்.