ஆந்திரா:நடிகர் அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கடந்த மே 10 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி கவனமீர்த்தது. ஹைதராபாத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெற இருக்கிறது.
இப்படத்தில் அஜித்தின் மகனாக மலையாள நடிகர் நஸ்லென் நடிக்க இருப்பதாக தகவல்கல் வெளியாகியுள்ளன. சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகிய பிரேமலு படத்தின் நாயகனாக நடித்தவர் நஸ்லென். குட் பேட் அக்லி அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.
இதற்கிடையில் அஜித் குமார் விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் செல்ல இருப்பதாக எதிர்பார்க்கப் படுகிறது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிவடைந்து விட்ட நிலையில் இன்னும் 30 முதல் 35 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது. வரும் ஜூன் 20 ஆம் தேதி படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. அஜித் , த்ரிஷா , அர்ஜூன் , ஆரவ் , ரெஜினா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் லைகா ப்ரோடக்ஷன்ஸ் மும்முரம் காட்டி வருகிறது.