சென்னை: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ’விடாமுயற்சி’.இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு இன்று ’விடாமுயற்சி’ உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜிகுமார் நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவரும் திரைப்படமாக ’விடாமுயற்சி’ உள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான 'துணிவு' திரைப்படத்திற்கு பிறகு இரண்டு வருடங்கள் கழித்து வெளியாகும் அஜித்தின் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் பண்டிகை போல கொண்டாடி வருகின்றனர். இன்று காலையில் இருந்தே மேள தாளம், கட் அவுட்டுக்கு பாலபிஷேகம், இசை கச்சேரிகள் என தூள் கிளப்பி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.
தமிழ்நாடு அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்த நிலையில் காலை 9 மணி முதல் தமிழ்நாடு முழுவதும் முதல் காட்சி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அஜித் ரசிகர்கள் பலர் கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களின் எல்லையோர மாவட்டங்களுக்கு சென்று 9 மணிக்கு முன்னதாகவே விடாமுயற்சி திரைப்படத்தை பார்த்துள்ளனர். அங்கு காலை 6 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டுவிட்டது.
அதன்படி ’விடாமுயற்சி’ படத்தின் விமர்சனமும் சமூக வலைதளங்களில் முன்பே வெளியாகி வருகின்றன. எக்ஸ் தளத்தில் தனியார் பக்கம் பதிவிட்டுள்ள விமர்சனத்தில், “சுவாரசியமான கதையும் சில நல்ல திருப்பங்கள் நிறைந்த காட்சிகளும் படத்தில் உள்ளன. ஆனால் படம் மிக மெதுவாக நகர்கிறது. கதை சொல்லும் விதமும் சுவாரசியமற்றதாக இருக்கிறது. படம் மிக ஸ்டைலிஷாக இருக்கிறது. அஜித் நன்றாக நடித்துள்ளார். ஆனால் முழுப்படமாக திருப்திப்படுத்தவில்லை” என பதிவிட்டுள்ளனர்.
அமெரிக்காவில் இருந்து தனது நண்பர் சொன்ன விமர்சனமாக ஒருவர் பதிவிட்டுள்ள பதிவில்,” விடாமுயற்சி திரைப்படமானது ஹாலிவுட் தரத்தில் உள்ளது. படத்தின் ஒளிப்பதிவு, நடிகர்களின் நடிப்பு என அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. பின்னணி இசை மிக சிறப்பாக இருப்பதாகவும் இரண்டு வருடங்களுக்கான காத்திருப்புக்கு தகுந்த படம்” எனவும் பதிவிட்டுள்ளார்.