சென்னை: தமிழ் சினிமாவின் பேய் படங்களில் மிக வித்தியாசமான படம் ’ஈரம்’ என சொல்லலாம். அந்த படத்திற்கு பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி, இசையமைப்பாளர் தமன் என மூவரும் இணைந்துள்ள படம் ’சப்தம்’. இப்படத்தில் ஆதியுடன் லட்சுமி மேனன், சிம்ரன், லைலா, ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா, ராஜீவ் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற பிப்ரவரி 28ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், சப்தம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் இயக்குனர் அறிவழகன் பேசுகையில், ”ரொம்ப நாள் பிறகு தியேட்டரில் வெளிவரக்கூடிய என்னுடைய படம் 'சப்தம்’. தண்ணீர் மூலமாக ஹாரர் விஷயத்தை ‘ஈரம்’ படத்தில் கொடுத்தோம். அது எல்லராலும் கொண்டாடப்பட்டது. கமர்ஷியலாகவும் வெற்றி பெற்றது. இப்படத்தில் சத்தத்தை வைத்து ஹாரர் படமாக எடுத்துள்ளோம்.
ஈரம் திரைப்படத்தில் தண்ணீர் மூலமாக பேயை காண்பிப்பது என்பது எளிதாக இருந்தது. ஆனால் கண்ணுக்கு தெரியாத சத்தத்தின் மூலம் பேய் வருவதை எப்படி எடுக்கப்போகிறோம் என சவால் இருந்தது. ஸ்கிரிப்ட்டில் மட்டுமல்ல படம் வெளிவரும் வரை இதற்கான உழைப்பு கொடுக்க வேண்டியுள்ளது. நம்முடைய தியேட்டர்களில் ஒலியமையமைப்பு நன்றாக இருக்காது.
எல்லா தியேட்டரிலும் ஒரே மாதிரியான ஒலியமைப்பு இல்லை. அதனால் இந்த படத்தில் சப்தம் மூலமாக நல்ல அனுபவத்தை கொடுக்க முடியாது என நிறைய பேர் என்னிடம் சொன்னார்கள். ஆனால் எல்லா தியேட்டரிலும் அடிப்படையான DTS ஒலியமைப்பு மாறாது. அந்த ஒலியமைப்பை நமது படத்தில் செய்வோம் என அதற்காக மொத்த படக்குழுவும் உழைத்துள்ளோம்.
இந்த படத்திற்கும் மற்ற படங்களுக்கு இருக்கும் வித்தியாசம் என்னவென்றால் என்னை பொறுத்தவரை திரைப்படம் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், அதே நேரத்தில் மக்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என நினைப்பேன். அந்தவகையில் சப்தம் திரைப்படம் புதிய அனுபவத்தை கொடுக்கும்.
படம் எடுத்தபின் கதை மிக மெதுவாக நகர்வதாக இயக்குநர்களே கூறி சில காட்சிகளை எடிட் செய்கின்றனர். ஆனால் கதையில் ஆழம் இருந்தால் படம் மெதுவாக நகர்வதாக தெரியாது. கதைக்கு தேவையான காட்சிகள் இருக்க வேண்டும். பத்து நிமிடங்களை குறைப்பதால் படம் வேகமாகி விடாது. கதையில் விஷயங்கள் இருந்தால்தான் படத்தில் வரும். ஒன்றரை மணி நேரத்திலும் மிக மெதுவாக கதை சொல்ல முடியும். மூன்று மணி நேரத்திலும் விறுவிறுப்பாக கதை சொல்ல முடியும். கதையை பொறுத்ததுதான்.