சென்னை: மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கி வருகிறது. இதில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு புஷ்பா, கங்குபாய் ஆகிய படங்கள் தேசிய விருதுகள் பெற்றன. இந்நிலையில் 70வது தேசிய திரைப்பட விருது இன்று (ஆக.16) அறிவிக்கப்பட உள்ளது. இந்த முறை 2022ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட உள்ளது. 2022ஆம் ஆண்டு தணிக்கை சான்றிதழ் பெற்ற படங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு தமிழ் சினிமா படங்கள் தேசிய விருது பெறாதது ஏமாற்றத்தை கொடுத்தது. மணிகண்டன் இயக்கத்தில் வெளியான 'கடைசி விவசாயி' திரைப்படம் சிறந்த பிராந்திய மொழி என்ற பிரிவில் தேசிய விருது வென்றது. அப்படத்திற்காக மறைந்த நல்லாண்டி தாத்தாவுக்கு சிறப்பு ஜூரி விருது வழங்கப்பட்டது.
'இரவின் நிழல்' படத்தில் இடம்பெற்ற "மாயவா தூயவா" படத்துக்காக சிறந்த பின்னணி பாடகி விருதை ஷ்ரேயா கோஷல் பெற்றார். பெரும் வரவேற்பைப் பெற்ற ஜெய்பீம், சார்பட்டா பரம்பரை படங்களுக்கு விருது வழங்கப்படாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.
இந்த ஆண்டு 2022ஆம் ஆண்டிற்கான படங்களுக்கு விருது அறிவிக்கப்படவுள்ளது. இதில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன் முதல் பாகம்' (Ponniyin selvan 1) விருதுகள் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு கிராபிக்ஸ் பிரிவில் விருது கிடைக்க வாய்ப்புள்ளது.
அதேபோல் கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்து வெளியான 'கார்கி' படத்திற்கும் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் சாய் பல்லவி அல்லது அவரது தந்தையாக நடித்த மறைந்த நடிகர் ஆர்எஸ் சிவாஜிக்கு கிடைக்க வாய்ப்புள்ளது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளியான 'மாமனிதன்' மற்றும் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘டாணாக்காரன்’ ஆகிய படங்களுக்கு விருது கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான 'விக்ரம்' படத்திற்கு சிறந்த சண்டை வடிவமைப்பு பிரிவில் விருது கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய விருதுகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்: 1954 முதல் மத்திய அரசு தேசிய விருது வழங்கப்படும் நிலையில், இன்று 70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படவுள்ளன. 70வது தேசிய திரைப்பட விருதுகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சிறந்த அறிமுக படத்துக்கான இந்திரா காந்தி விருது, சிறந்த அறிமுக திரைப்பட இயக்குநர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்விருது வாங்கும் இயக்குநருக்கு 3 லட்சம் பரிசு தொகை வழங்கப்படவுள்ளது.
சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருது, தேசிய சமூக மற்றும் சுற்றுசூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்விருது பெறும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு பதக்கத்துடன் 2 லட்சம் வழங்கப்பட்டவுள்ளது.
அதேபோல் தாதா சாஹேப் பால்கே விருதுக்கான பரிசுத்தொகை 10 லட்சத்திலிருந்து 15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் சிறந்த குடும்ப படம் என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்த விருது நீக்கப்பட்டு, சிறந்த திரைக்கதை என்ற விருது அறிமுக்கப்படுத்தப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: விக்ரமின் அசாத்திய நடிப்பில் வரவேற்பை பெறும் தங்கலான்... முதல் நாள் வசூல் எவ்வளவு? - thangalaan collections