சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் பிற துறை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பணியில் உள்ள 2,582 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு 41 ஆயிரத்து 485 தேர்வர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 130 மையங்களில் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு மையத்திற்குள் காலை 8.30 மணி முதல் முழுவதும் சோதனை செய்த பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர், அவர்கள் காலை 9.30க்கு மேல் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தமிழ் மொழித் திறன் அறிவதற்கான 30 கேள்விகள் 50 மதிப்பெண்களுக்கும், முதன்மைப் பாடமான தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களில் இருந்து ஒரு பாடத்தில் 150 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு இடம் பெறும். தேர்வுகள் காலை 10.30 மணிக்கு துவங்கிய நிலையில், 1.30 மணிக்கு முடிவடையும்.
தேர்வர்களுக்கான கட்டுப்பாடுகள்:ஹால் டிக்கெட், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், கருப்பு நிற பேனா ஆகியவை மட்டுமே அனுமதிக்கப்பட்டன. தேர்வு அறையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டனர். அனைத்து மாவட்டங்களில் நடைபெறும் தேர்வினைக் கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறையின் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் நியமனம் செய்யப்பட்டு கண்காணித்தனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர்களும் தேர்வினைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்வு மையத்தில் அரசுத் தேர்வு நடைபெறுவதால், அனுமதியின்றி யாரும் நுழையக்கூடாது என்ற எச்சரிக்கை வாசகம் வைக்கப்பட்டது. அச்சிடப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்ட தாள்கள் எவற்றையும் தேர்வு அறைக்குள் வைத்திருக்க அனுமதியில்லை. தேர்வறைக்குள் அறைக் கண்காணிப்பாளர் அல்லது பிற தேர்வர்களிடம் முறை தவறி நடந்தால், அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் போன்றவை குறித்தும் தேர்வு மையத்தின் கண்காணிப்பாளர்கள், தேர்வர்களுக்கு அறிவுரை வழங்கினர்.