சென்னை: தமிழ்நாட்டில் 18 துணை ஆட்சியர்கள், 26 காவல்துணை கண்காணிப்பாளர்கள், 25 வணிகவரித்துறை உதவி ஆணையர்கள், 13 கூட்டுறவுத்துறையின் துணைப் பதிவாளர்கள், 7 ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்கள், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் ஆகிய காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு குருப் 1 தேர்வில் தகுதிப்பெற்ற 198 பேருக்கு 12ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் தேதி குருப் 1 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டது. அதில், 18 துணை ஆட்சியர்கள், 26 காவல்துணை கண்காணிப்பாளர்கள், 25 வணிகவரித்துறை உதவி ஆணையர்கள்,13 கூட்டுறவுத்துறையின் துணைப் பதிவாளர்கள், 7 ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் என சுமார் 92 பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடரந்து, குரூப் 1 தேர்வு முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என 3 கட்டங்களாக நடத்தப்பட்டது. அந்த வகையில், 2022ஆம் ஆண்டு முதல் நிலைத் தேர்வு முடிந்த நிலையில் தற்போது, மதிப்பெண் அடிப்படையில் சிலரே முதன்மைத் தேர்விற்கு தகுதி பெற்றனர். அதில் தகுதி பெற்றவர்களுக்கான முதல் நிலைத் தேர்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் 2023 ஏப்ரல் 28ஆம் தேதி வெளியிடப்பட்டது.