சென்னை:தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வின் போது, செல்போன் பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 3,302 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 3,225 மையங்களில் மாணவர்கள் தேர்வினை எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு 12ம் வகுப்பிற்கு மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையிலும், 11ம் வகுப்பிற்கு மார்ச் 4ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையிலும், 10ம் வகுப்பிற்கு மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.
இவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் 12ம் வகுப்பிற்குப் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையிலும், 11ம் வகுப்பிற்குப் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையிலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் செய்முறைத்தேர்வு பிப்ரவரி 23ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசுத் தேர்வுத்துறை இயக்குநரகம் பொதுத்தேர்வினை நடத்துவதற்கு உரிய முன்னேற்பாடுகளைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வினை மார்ச் 1ஆ தேதி முதல் 22ஆம் தேதி வரையிலும், சுமார் 3,302 மையங்களில், 7.25 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். இதற்காக 154 இடங்களில் கேள்வித்தாள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 1,135 பறக்கும் படையினரும், தேர்வினைக் கண்காணிக்கும் பணியில் 43 ஆயிரத்து 200 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள 591 பள்ளிகளில் படிக்கும் 62 ஆயிரத்து 124 மாணவர்கள், 240 மையங்களில் தேர்வினை எழுதுகின்றனர். தேர்வினைக் கண்காணிக்கும் பணியில் முதன்மைக் கண்காணிப்பாளர்களாக 265 பேரும், துறை அலுவலர்கள் 275 பேரும், அறைக் கண்காணிப்பாளர்கள் 3,200 பேரும், பறக்கும் படையில் 620 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர், கடலூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, பாளையங்கோட்டை, திருச்சிராப்பள்ளி, புழல் சிறையில் உள்ளவர்களும் தேர்வு எழுதுவதற்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு விதிகளில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. தேர்வுப் பணியில் அனைத்து நிலைகளிலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன. வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில் 24 மணி நேர ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகளை அனைத்தும் சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்கிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடன் செல்போனை கண்டிப்பாக எடுத்து வருதல் கூடாது.
மேலும் தேர்வர்களது அலைபேசிகள் பராமரிப்பிற்குத் தேர்வு மையங்கள் பொறுப்பேற்காது. அத்துடன் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் தங்களுடன் செல்போன் வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுரையை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ செல்போன், இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாகக் கண்டறியப்பட்டால், கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தேர்வர்களின் சந்தேகங்களைத் தீர்ப்பதற்காகத் தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை, அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இனி விரைவு அஞ்சல் மூலமே ஓட்டுநர் உரிமம் - போக்குவரத்துத்துறை அதிரடி நடவடிக்கை!