சென்னை:பிஇ, பிடெக் போன்ற பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு மூன்று கட்டங்களாக நடைபெற்று சமீபத்தில் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து காலியாக உள்ள மீதி இடங்களில் ஏற்கனவே விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கவும், பன்னிரண்டாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பொறியியல் படிப்பில் வாய்ப்பு வழங்கும் வகையில் துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், "இன்று(ஆக.28) முதல் வரும் செப்.4ஆம் தேதி வரை www.tneaonline.org, www.dte.tn.gov.in ஆகிய இணையதள முகவரியில் மாணவர்கள் தங்கள் வீடுகளிலிருந்தும், மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
இதில், மாணவர்களுக்கான பதிவு கட்டணம் ரூ.500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி மற்றும் எஸ்சிஏ மாணவர்களுக்கான பதிவு கட்டணம் ரூ.250 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. துணை கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு செப்டம்பர் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 - 2025 கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் 433 கல்லூரிகளில் இளங்கலை பிஇ, பிடெக் படிப்பில், சுமார் 2 லட்சத்து 33 ஆயிரத்து 376 இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு அண்ணா பல்கலைக் கழகம் அனுமதி வழங்கியது. அதில், ஒற்றை சாரள முறையிலான கலந்தாய்வில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 938 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.