சென்னை:தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையிலும், 11ஆம் வகுப்பிற்கு மார்ச் 4ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையிலும், 10ஆம் வகுப்பிற்கு மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.
மேலும், 12ஆம் வகுப்பிற்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையிலும், 11ஆம் வகுப்பிற்கு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையிலும், 10ஆம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு பிப்ரவரி 23ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையில் நடத்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு, அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், பொதுத்தேர்வு பணிகளைக் கண்காணிப்பதற்கு மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித் துறையில் மாநில அளவில் பணியாற்றும் இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்களை நியமனம் செய்து, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
2024 மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் நடைபெறும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுப் பணிகளை மேற்பார்வையிட பள்ளிக்கல்வித்துறை இயக்கங்களைச் சார்ந்த அதிகாரிகள், இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் மாவட்டங்களுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நியமனம் செய்து ஒதுக்கீடு செய்யப்பட்ட அதிகாரிகள், எதிர்பாராத சூழ்நிலையில் தேர்வுப்பணிகளை மேற்பார்வையிடச் செல்ல இயலாத சூழ்நிலை ஏற்பட்டால், அவருக்குப் பதிலாக வேறு அலுவலரை அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் நியமனம் செய்யலாம்.
அந்த வகையில், சென்னை மாவட்டத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஸ்ரீ வெங்கடப்பிரியா, ஈரோடு மாவட்டத்திற்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் கெஜலட்சுமி, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் ஆர்த்தி, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி திருவள்ளுர் மாவட்டத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் வேலூர் மாவட்டத்திற்கும், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் உமா காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும், மதுரை மாவட்டத்திற்கு தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜமுருகன், சேலம் மாவட்டத்திற்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் செயலாளர் குப்புசாமி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் மாநில திட்ட இயக்குனர் உமா கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு என 38 மாவட்டத்திற்கும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:74 வயதில் முனைவர் பட்டம்.. ஓய்வு பெற்ற பேருந்து நடத்துநரின் தமிழ் ஆர்வம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!