சென்னை:மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்க்கைக்கான முதல் சுற்றுக் கலந்தாய்வில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் 9,900 இடங்கள் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுப்பிரிவில் இடம் பெற்றுள்ள மாணவர்கள், இன்று (ஆக.21) காலை 10 மணி முதல் 27ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலமாக கலந்தாய்வில் பங்கேற்று, தாங்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று காலை 10 மணிக்கு www.tnmedicalselection.org என்ற இணையதளம் மூலமாக தரவரிசை ஒன்று முதல் 28 ஆயிரத்து 819 வரையில் இடம் பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கு நீட் தேர்வு மதிப்பெண்கள் 720 முதல் 127 வரையில் பெற்றுள்ளவர்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கு நிர்வாக ஒதுக்கீட்டிற்கான தரவரிசை எண் 1 முதல் 13,417 வரையில் நீட் தேர்வு மதிப்பெண் 715 முதல் 127 வரையில் பெற்றுள்ளவர்களும் தாங்கள் விரும்பும் கல்லூரிகளை 27ஆம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம்.
இதன் மூலம், எம்பிபிஎஸ் படிப்பில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,962 இடங்களுக்கும், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் 30 இடங்களுக்கும், கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 91 இடங்களுக்கும் என 4,083 இடங்களிலும், 22 தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் 3,302 இடங்களும், 4 தனியார் பல்கலைக்கழகங்களில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் 528 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
அதேபோல் பிடிஎஸ் படிப்பில் சென்னை, புதுக்கோட்டை, கடலூர் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 197 இடங்களும், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் 1,790 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. வரும் 28ஆம் தேதி மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படும். 29ஆம் தேதி தற்காலிக முடிவுகள் வெளியிடப்பட்டு, 30ஆம் தேதி இறுதி ஒதுக்கீட்டு ஆணைகள் வெளியிடப்படும் என மருத்துவக் கல்வி மற்றும ஆராய்ச்சி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.