டெல்லி: JEE மெயின் 2025 (அமர்வு 2)-க்கான ஆன்லைன் பதிவுகள் பிப்ரவரி 25 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கு பிப்ரவரி 25, இரவு 9 மணி வரையும், கட்டணங்களை செலுத்துவதற்கு இரவு 11:50 மணி வரை மட்டுமே செலுத்த முடியும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்கள் மற்றும் வழிமுறைகளுக்கு https://jeemain.nta.nic.in/information-bulletin/ என்ற இணையதளம் வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம்.
இது குறித்து, CSAB 2025- ன் தலைவர் பேராசிரியர் கே. உமாமகேஷ்வர் ராவ் கூறுகையில், “நாட்டின் திறமையான மாணவர்களை JEE முதன்மை 2025 தேர்வில் பதிவு செய்ய ஊக்குவிக்கிறேன். இந்த மதிப்புமிக்க தேர்வில் வெற்றி பெறுவது வாழ்க்கையை மாற்றும் சாதனையாக இருக்கும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
JEE முதன்மை தேர்வுக்கான தகுதிகள்:
வயது வரம்பு : JEE (மெயின்) 2025 தேர்வை எழுதுபவர்களுக்கு வயது வரம்பு இல்லை.
JEE தகுதித் தேர்வுகள்: விண்ணப்பதாரர்கள் 2023, 2024 ஆம் ஆண்டுகளில் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 2025 ஆம் ஆண்டில் தேர்வெழுதியிருக்க வேண்டும். இந்த தேர்விற்கும், 12 ஆம் வகுப்பு, PU, NDA, NIOS, IB மாணவர்கள் தகுதியானவர்களாவர். மாணவர்கள் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்டு முதல் தொடர்ந்து 3 ஆண்டுகள் ஜேஇஇ மெயின் தேர்வில் கலந்து கொள்ளலாம்.