சென்னை:சென்னை ஐஐடி மற்றும் ரோபர் ஐஐடி இடையே பிஎஸ் பட்டப்படிப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதை சென்னை ஐஐடி இயக்குனர் வி.காமகோடி மற்றும் ஐஐடி ரோபர் இயக்குனர் ராஜீவ் அஹுஜா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம் குறித்து பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடி, “சென்னை ஐஐடி பிஎஸ் பட்டப்படிப்புகள் அனைவருக்கும் உயர்கல்வி வாய்ப்பு கிடைக்கும் நோக்கத்தில் அமைக்கப்பட்டது. எனவே, ஐஐடி ரோபரில் முதுகலைப் படிப்புகளை தொடரவிருக்கும் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்ட தொலைநோக்குத் திட்டமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை ஐஐடி பிஎஸ் டேட்டா சயின்ஸ் (தரவு அறிவியல்) பட்டப்படிப்பு, மாணவர்களுக்கு கேட் தேர்வு இன்றி ஐஐடி ரோபரில் எம்எஸ் படிப்பில் நேரடியாக சேர்க்கப்படுவார்கள்.
இதன் அடிப்படையில், சென்னை ஐஐடி பிஎஸ் பட்டப்படிப்பு மாணவர்கள் ஐஐடி ரோபரில் ஒரு வருடம் வரை சென்று படிக்க முடியும். சென்னை ஐஐடி பிஎஸ் பட்டப்படிப்பு மாணவர்கள் கோடை காலத்தில் ஐஐடி ரோபர் வழங்கும் ஆராய்ச்சித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆசிரியர்களிடம் ப்ராஜக்ட்டுகள், செய்முறை பயிற்சிகளைத் தொடர முடியும். மேலும், இந்த டேட்டா சயின்ஸ் பிஎஸ் (தரவு அறிவியல்) மாணவர்கள் ஆன்லைன் முறையில் கல்வி கற்பதுடன், நேரடிக் கற்றலையும் பயன்படுத்திக் கொண்டு, பிற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் நேரடியாக கல்வி கற்க முடியும்.
பிஎஸ் டேட்டா சயின்ஸ் படிப்பை சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் 3 ஆண்டுகள் இங்கு படித்துவிட்டு, 4ஆம் ஆண்டு ஐஐடி ரோபரில் செய்முறை கல்வியை கற்றுக் கொள்வார்கள். அதேபோல், ஐஐடி ரோபரில் படிக்கும் மாணவர்களும் ஐஐடியின் பிஎஸ் டேட்டா சயின்ஸ் படிப்பை படிக்கலாம். இதனால் மேலும் பல புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு அமையும்.
இது முதல்முறையாக இரண்டு ஐஐடி நிறுவனங்களுக்கு இடையில் கையெழுத்தாகும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.
ஒவ்வொரு ஐஐடியிலும் உள்ள செனட் குழு தான் பாடப்பிரிவுகளையும், அதில் யார் சேரலாம் போன்றவற்றையும் அனுமதிக்கும். இந்நிலையில், தற்போது ஐஐடி ரோபரில் படிக்கும் மாணவர்கள் சென்னை ஐஐடியில் படிக்கவும், இரு ஐஐடிகளில் வழங்கப்படும் மதிப்பெண்கள் கிரெடிட்டில் கணக்கில் எடுத்துக் கொள்ளவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.