சென்னை:இந்தியாவில் தேசிய புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கையில் பின்பற்றப்பட உள்ள புதிய வழிகாட்டுதல்கள், தேர்வு முறை, படிப்பிற்கான காலம், மாணவர்களுக்கான கிரெடிட் நடைமுறைக்கான வரைவு அறிக்கையை பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்டுள்ளது. இந்த புதிய முறையின் படி, மாணவர்கள் 4 ஆண்டு பட்டப்படிப்பினை முன்கூட்டியே முடிக்கவும் முடியும்.
மாணவர்களுக்கான பருவத்தேர்வுகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மாணவர்கள் விடுமுறை இல்லாமல் பருவத்தினை படிப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. புதிய விதிமுறையின் படி, ஆண்டிற்கு இரு முறை மாணவர் சேர்க்கை இளநிலை மற்றும் முதுகலை வகுப்புகளில் மேற்கொள்ளப்படும். அதன்படி, ஜூலை ஆகஸ்ட் மாதங்களிலும், ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களிலும் மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படும் என அந்த வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கைக்கான புதிய வழிகாட்டுதல்கள்:
இதுதொடர்பான அறிக்கையில், "பன்னிரெண்டாம் வகுப்பில் எந்த பிரிவை தேர்ந்தெடுத்து படித்தாலும், மாணவர்கள் விரும்பும் இளநிலை மற்றும் முதுகலை படிப்புகளில் சேரலாம். அதற்கேற்ற வகையில் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு மற்றும் பல்கலைக்கழகம் நடத்தக்கூடிய குறிப்பிட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும். பட்டப்படிப்பில் பயில்கின்ற போதே பாதியில் அதிலிருந்து வெளியேறி வேறு படிப்பில் சேர்வதற்கான வழிமுறைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம் (Getty images) இளநிலை படிப்புகளை மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் முடிக்கக்கூடிய வகையிலும், முதுகலை படிப்புகளை இரண்டு அல்லது ஓராண்டில் முடிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேபோல இளநிலை, முதுகலை படிப்புகளை ஓராண்டுக்கு முன்னதாகவே முடிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் திறன்களை வளர்க்கும் வகையில் 50 சதவீதம் பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தகுதி இல்லையா?.. தேர்வுக்குப்பின் விதிகளை மாற்றிய டிஎன்பிஎஸ்சி - 27 ஆயிரம் பட்டதாரிகளின் நிலை என்ன?
மேலும் மாணவர்கள் படிக்கும் போதே தொழிற்பயிற்சி அளிக்கும் வகையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு 4 ஆண்டு இளநிலை படிப்பில் இளங்கலை அறிவியலின், கெளரவ இயற்பியல் படிப்பு (B.Sc. Hons. in Physics), கெளரவ உயிரியல் படிப்பு (B.Sc. Hons. in Biology), கெளரவ கணிதவியல் படிப்பு (B.Sc. Hons. in Mathematics) ஆகியவற்றுக்கான பட்டம் பெற்றால், முதுகலைப் பொறியியல் படிப்பை 2 ஆண்டுகள் படிக்கலாம்.
அறிக்கை (ETV Bharat Tamil Nadu) மாணவர்கள் பட்டப்படிப்பினை படிக்கும் போது வெளியில் சென்று விட்டு, பின்னர் மீண்டும் சேர்ந்து படிப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தொடர்ந்து படித்தாலும், இடையில் நின்று மீண்டும் படித்தாலும் அவர்களுக்கு அரசு, தனியார் மற்றும் பொது நிறுவனங்களுக்கு செல்லும் போது சான்றிதழ்கள் செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை மீது பொது மக்கள் தங்களின் கருத்துகளை டிசம்பர் 23ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.