தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / education-and-career

பொறியியல் படிப்பிற்கான 3ஆம் சுற்று கலந்தாய்வு: 63,843 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு! - TNEA SEAT ALLOTMENT - TNEA SEAT ALLOTMENT

TNEA SEAT ALLOTMENT: பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் 3 சுற்று கலந்தாய்விற்கு பொதுப்பிரிவு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 381 இடங்கள் அனுமதிக்கப்பட்டதில், 63 ஆயிரத்து 843 இடங்கள் தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2024, 6:33 PM IST

சென்னை: 2024-25ம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் 433 கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் இளங்கலையில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 376 இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு அண்ணா பல்கலைக் கழகம் அனுமதி வழங்கி உள்ளது. அதில் ஒற்றை சாரள முறையிலான கலந்தாய்வில் தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கை மூலம் 1 லட்சத்து 79 ஆயிரத்து 938 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 868 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தரவரிசை பட்டியல் ஜூலை 10ஆம் தேதி வெளியிடப்பட்டன. பொதுப்பிரிவில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 3ஆம் தேதி நிறைவு பெறுகிறது. பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் பொதுப் பிரிவிற்கான கலந்தாய்வு ஜூலை 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல் மற்றும் இரண்டாம் சுற்றுக் கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 8 ஆயிரத்து 308 இடங்களும், பொதுப்பிரிவில் 62 ஆயிரத்து 802 இடங்களும் என 71 ஆயிரத்து 110 இடங்கள் நிரம்பி உள்ளது. 3ஆம் சுற்றுக் கலந்தாய்வு ஆகஸ்ட் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் கட்-ஆஃப் மதிப்பெண் 141.955 முதல் 77.50 வரை உள்ள மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் 25ஆம் தேதி மாலை 5 மணி வரை தங்களுக்கு விருப்பக் கல்லூரிகள் பட்டியலை பதிவு செய்தனர். மாணவர்கள் கொடுத்துள்ள விருப்பப் பட்டியலின் அடிப்படையில் 26ஆம் தேதி காலை 10 மணிக்கு தற்காலிக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் பொதுப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட 93 ஆயிரத்து 59 மாணவர்களில், 68 ஆயிரத்து 198 மாணவர்கள் விரும்பும் கல்லூரியை பதிவு செய்தனர். அவர்களில் 58 ஆயிரத்து 889 மாணவர்களுக்கு தற்காலிகமாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் அரசுப் பள்ளி மாணவர்களில் 21 ஆயிரத்து 740 பேர் அனுமதிக்கப்பட்டதில், 14 ஆயிரத்து 495 மாணவர்கள் பதிவு செய்தனர். அவர்களில் 4 ஆயிரத்து 954 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுப்பிரிவு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 63 ஆயிரத்து 843 பேருக்கு தற்காலிகமாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை 27ஆம் தேதி மாலை 5 மணிக்குள் உறுதி செய்ய வேண்டும்.

மாணவர்கள் கொடுத்த விருப்பத்தின் அடிப்படையில் 28ஆம் தேதி காலை 10 மணிக்கு, இடத்தை உறுதி செய்த மாணவர்களுக்கு கல்லூரி சேர்வதற்கான சேர்க்கை ஆணையும், UPWARD கொடுத்த மாணவர்களுக்கு அதற்கான படிவமும் மாணவர்களுக்கு அனுப்பப்படும். தொடர்ந்து ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரை மாணவர்கள் கல்லூரியில் சேர வேண்டும் என பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு கூறியுள்ளது.

இதையும் படிங்க:தன்னாட்சிக் கல்லூரிகளிலும் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் - அண்ணா பல்கலை செக்! - anna University

ABOUT THE AUTHOR

...view details