தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / education-and-career

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பொதுத்தேர்வு மையத்திற்கு தடை.. அரசுத் தேர்வுத்துறை அறிவிப்பு! - Directorate of Examinations

Directorate of Government Examinations: 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் பயணம் செய்து தேர்வு எழுத தேர்வு மையங்களுக்குச் செல்லும் மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிகளில் புதிய தேர்வு மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

அரசுத் தேர்வுகள் இயக்ககம்
அரசுத் தேர்வுகள் இயக்ககம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2024, 9:27 PM IST

சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 2024 - 2025ஆம் கல்வியாண்டில் படிக்கும் மாணவர்கள், பொதுத் தேர்விற்கு ஏற்கனவே தேர்வு மையமாக செயல்பட்டு வரும் பள்ளிகள், புதிய தேர்வு மையம் கேட்கும் பள்ளிகள் அனைத்தும் அரசு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் தேர்வு மையமாக செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மாநிலப் பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வினை அரசுத் தேர்வுத்துறை நடத்தி வருகிறது. அரசுத் தேர்வுத்துறை ஒவ்வாெரு ஆண்டும் மார்ச், ஏப்ரல் மாதம் பொதுத் தேர்வு நடைபெறுவதற்கு முன்னர், பொதுத்தேர்விற்கு தேர்வு மையம் விரும்பும் பள்ளிகளிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற்று, தகுதியின் அடிப்படையில் புதிதாக தேர்வு மையங்களை வழங்கி வருகிறது.

இந்த நிலையில், அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், “2024-25ஆம் கல்வியாண்டில் பொதுத்தேர்வுகான புதிய தேர்வு மையங்கள் கேட்கும் கருத்துக்களை அனுப்பி வைக்கக் கோரி விண்ணப்பங்களை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும். அதன் அடிப்படையில், பள்ளிகள் தரும் விண்ணப்பத்தை சரிபார்த்து தேர்வுத்துறைக்கு அனுப்ப வேண்டும்.

மேலும், தேர்வு மையங்கள் அமைப்பது இன்றியமையாதது என்று கருதப்படும் பள்ளிகளுக்கு மட்டும் சம்பந்தப்பட்ட பள்ளியை நேரில் ஆய்வு செய்த பின்னர், அவசியம் தேர்வு மையமாக அமைத்தே ஆக வேண்டும் என கருதினால், அதற்கான காரணத்தை தெளிவாக குறிப்பிட்டு குறிப்புரையுடன் அனுப்பி வைக்க வேண்டும். 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்விற்காக ஒராண்டிற்கு மட்டும் தேர்வு மையம் அமைக்க அனுமதிக்கப்பட்ட பள்ளிகள், தொடர்ந்து தேர்வு மையமாக செயல்பட வேண்டுமெனில் நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும்.

10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் பயணம் செய்து தேர்வு எழுத, தேர்வு மையங்களுக்ச்கு செல்லும் மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிகளில், புதிய தேர்வு மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். தற்பொழுது செயல்பட்டு வரும் பள்ளிகளில் ரத்து செய்ய வேண்டி தேர்வு மையம் இருப்பின், அதனையும் பரிந்துரைக்கு அனுப்ப வேண்டும்.

2024 - 25ஆம் கல்வியாண்டில் பொதுத் தேர்விற்கு ஏற்கனவே தேர்வு மையமாக செயல்பட்டு வரும் பள்ளிகள், புதிய தேர்வு மையம் கேட்கும் பள்ளிகள் அனைத்தும் அரசு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் தேர்வு மையமாக செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது. இவை அனைத்தும் செப்டம்பர் 13ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:காமராஜர் கைகாட்டிய இடம்.. ராசிமணல் பகுதியில் அணை கட்டினால் என்ன பயன்?

ABOUT THE AUTHOR

...view details