சென்னை:சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 271வது சிண்டிகேட் கூட்டம், கடந்த ஜூலை 29ஆம் தேதி நடைபெற்றது. அதில், பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தக் கூட்டத்தில், போலி பேராசிரியர்களை கணக்கு காண்பித்தது குறித்தும் விவாதிக்கப்பட்டு, கல்லூரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பொறியியல் கல்லூரியில் ஆசிரியர்கள் நியமனம் மோசடியாக நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், 295 பொறியியல் கல்லூரிகளில் 700 ஆசிரியர்கள் போலியாக பல கல்லூரிகளில் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 295 பொறியியல் கல்லூரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் 20 சதவீதம் கல்லூரிகள் அதற்கான விளக்கத்தை அளித்துள்ளது. மேலும், 80 சதவீத கல்லூரிகள் விளக்கம் அளிக்க கூடுதல் அவகாசம் கேட்டுள்ளது. அதன் அடிப்படையில், குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளிக்க மேலும் 10 நாட்கள் கூடுதல் அவகாசம் அந்த கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டன.
தற்பொழுது அந்தக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் ஆதார் எண், பான் எண் போன்றவை வாங்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகிறது. மேலும், அங்கீகாரம் பெறுவதில் போலியாக ஆசிரியர்களை கணக்கு காண்பித்த விவகாரத்தில், விசாரணை செய்வதற்கு தேசிய ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் உஷா நடேசன், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் குமரவேல், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஆபிரகாம் ஆகியோர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.