சென்னை:அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தொலைதூரக் கல்வி மூலம் பொறியியல் பட்டப்படிப்பு பயின்ற மாணவர்களில் அரியர் வைத்துள்ளவர்கள் சிறப்பு அரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2001 மற்றும் 2002ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றின் கீழ் மாணவர் பொறியியல் படிப்பிற்கான சேர்க்கை நடைபெற்று முதல் மற்றும் இரண்டாம் செமஸ்டர் தேர்வுகள் அந்தந்த பல்கலைக்கழகங்கள் கீழ் நடத்தப்பட்டன.
மூன்றாவது செமஸ்டர் முதல் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன. எனவே மேற்கண்ட பல்கலைக்கழகங்களின் கீழ் 2001 - 2002ஆம் கல்வியாண்டில் இருந்து பொறியியல் படிப்பில் சேர்ந்து அரியர் வைத்துள்ள மாணவர்கள் சிறப்பு அரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. வரும் நவம்பர், டிசம்பர் மாதம் மற்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதம் என இரண்டு அமர்வுகளாக இந்த சிறப்பு தேர்வு நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த சிறப்பு அரியர் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து சென்னை, விழுப்புரம்,ஆரணி, சேலம், ஈரோடு, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை. நாகர்கோவில் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
நவம்பர், டிசம்பர் 2024 சிறப்பு அரியர் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு ஆகஸ்ட் 30 அன்று காலை 11 மணிக்கு தொடங்கி, செப்டம்பர் 18 அன்று மாலை 4 மணிக்கு நிறைவடையும் என்றும் எக்காரணத்திற்காகவும் விண்ணப்பப்பதிவு காலம் நீட்டிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது.
இதற்காக ஐந்தாயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், அரியர் வைத்துள்ள ஒவ்வொரு பாடத்திற்கும் 225 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக டிடி எடுக்கப்பட்டு வரும் செப்டம்பர் 25ஆம் தேதிக்கு முன்னதாக, 'அரியர் தேர்வு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம்' என குறிப்பிட்டு தபால் மூலமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலருக்கு உரிய ஆவணங்களை கொண்டு சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்த மேலதிக விவரங்களை https://aucoe.annauniv.edu, https://coe1.annauniv.edu ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் மற்றும் ஹால் டிக்கெட், தேர்வு மையங்கள் குறித்த விவரங்களும் இந்த இணையதளங்கள் வாயிலாக தெரிவிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்வியாண்டு முடிந்து 3 ஆண்டுகளில் அரியர் தேர்வை முடிக்காதவர்களின் டிகிரி ரத்து செய்யப்படும் நிலையில், தேர்வெழுத கால அவகாசம் முடிந்தவர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வரவேற்கத்தக்கதாக உள்ளதாக கல்வி ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க:14 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவரும் சேராத அவலம்.. 3-ம் சுற்று கலந்தாய்வில் கவனிக்க வேண்டியது என்ன? - TNEA SEAT ALLOTMENT