சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் தேர்வுக் கட்டணத்தை 50 சதவீதம் வரை உயர்த்தி அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுக் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “2023ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழுவில் செமஸ்டர் தேர்வு கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. மாணவர்கள் நலன் கருதி கடந்த ஆண்டு பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு கட்டணங்கள் உயர்த்தப்படாது எனவும், பழைய கட்டண முறையே பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த கல்வி ஆண்டு தொடக்கத்தின் போது ஆட்சிமன்றக்குழுவின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட சமச்சீர் கட்டண உயர்வு மீண்டும் அமலுக்கு வருவதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால், மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், அடுத்த சிண்டிகேட்டில் தீர்மானம் நிறைவேற்றும் வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணம் நிறுத்திவைக்கப்படுகிறது.
தேர்வுக் கட்டணத்தில் இப்போதுள்ள நடைமுறையே தொடரும். இந்தாண்டு மட்டுமல்ல, அடுத்தாண்டும் தேர்வுக் கட்டணம் நிறுத்திவைக்கப்படுகிறது. தேர்வுக் கட்டணத்தை உயர்த்துவது மாணவர்களை பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தன்னாட்சி பெற்ற கல்லூரிகளிலும், செமஸ்டர் தேர்வு கட்டணம் எவ்வளவு வசூலிக்கப்பட வேண்டும் என்பதை வரையறை செய்து அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் சுற்றறிக்கை வழங்கப்பட உள்ளது.