டெல்லி: சர்வதேச சந்தை நிலவரம், கணிசமான உயர்ந்த வெளிநாட்டு முதலீடுகள், குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்த டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி மற்றும் இன்போசிஸ் பங்குகளின் விலை காரணமாக மும்பை பங்கு சந்தை வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பார்வை இந்திய சந்தையின் மீது திரும்பியுள்ள நிலையில், பங்குச் சந்தை தொடங்கியது முதலே கணசிமாக அளவில் குறிப்பிட்ட பங்குகளின் விலை உயர்ந்தது.
இதன் காரணமாக வர்த்தகம் தொடங்கிய சில மணி நேரங்களில் மும்பை பங்குச்சந்தை 388.84 புள்ளிகள் உயர்ந்து 80 ஆயிரத்து 375.64 புள்ளிகளில் நிலை பெற்றது. இதன் மூலம் வரலாறு காணாத அளவில் மும்பை பங்கு சந்தை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதேபோல் தேசிய பங்கு சந்தையான நிப்டியும் 114.45 புள்ளிகள் உயர்ந்து இதுவரை இல்லாத அளவாக 24 ஆயிரத்து 400.95 புள்ளிகள் உயர்ந்தது.
டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, இன்போசிஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குக விலை வர்த்தகம் தொடங்கிய சில மணி நேரங்களில் கணிசமாக உயர்ந்தது. பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டு நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்ததை அடுத்து அதில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் கணிசமான வருவாயை ஈட்டி உள்ளனர்.
அதேநேரம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மற்ற நிறுவனங்கள் பாரதி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. கடந்த புதன்கிழமை வெளிநாட்டு முதலிட்டாளர்கள் 5 ஆயிரத்து 483 கோடியே 63 லட்ச ரூபாயை இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அந்நிய செலாவணி அதிகரிப்பு காரணமாக இந்திய பங்கு சந்தையின் மதிப்பு அடுத்த சில நாட்களுக்கு தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் என பங்குசந்தை நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்திய பங்குச்சந்தையை தொடர்ந்து ஆசிய அளவில் ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் பங்குச் சந்தைகள் கணிசமாக ஏற்றத்தை கண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம் தைவான் உடனான போர் பதற்றம், செமி கண்டக்டர் உற்பத்தியில் இடர்நிலை உள்ளிட்ட காரணங்களால் சீனா மற்றும் ஹாங் காங் பங்குச் சந்தைகள் குறிப்பிடத்தக்க வகையில் சரிவை சந்தித்துள்ளன. மேலும் அமெரிக்காவில் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு மத்தியில் பங்குச் சந்தை வளர்ச்சியுடன் நிறைவடைந்து இருப்பது சர்வதேச அளவில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:பிரதமர் மோடியுடன் இந்திய வீரர்கள் சந்திப்பு! சிறப்பு ஜெர்சியில் தோன்றிய இந்திய வீரர்கள்! - Indian Team Meet PM Modi