மதுரை:மதுரை மல்லிகை கிலோ ரூ.4,200-க்கு விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் என்பதாலும், கடும் பனிப்பொழிவு காரணமாக உற்பத்தி வீழ்ச்சி என்பதாலும் கடுமையான விலையேற்றம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மலர் வணிக வளாகம். இங்கு அலங்காநல்லூர், பாலமேடு, உசிலம்பட்டி, ஆவியூர், நெடுங்குளம், வலையங்குளம், திருமங்கலம், சிலைமான், மேலூர், கொட்டாம்பட்டி உள்ளிட்ட மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
மேலும், அண்டை மாவட்டங்களான திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் பூக்கள் இங்கே கொண்டு வரப்படுவது வழக்கம். குறிப்பாக மேற்கண்ட பகுதிகளில் விளையும் மல்லிகைப் பூக்களுக்கு எப்போதும் தனி மவுசு உள்ளது. மணம், தன்மை, தரம் காரணமாக மதுரை மல்லிகைக்கு மத்திய அரசின் புவிசார் குறியீட்டு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதனால் மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கும் மதுரையிலிருந்து டன் கணக்கில் மல்லிகைப்பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.