தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

" வரி வசூலை எளிதாக்க ஏ.ஐ. தொழில்நுட்பம்" -வல்லுநர் ரத்தினவேலு அரசுக்கு யோசனை! - BUDGET 2025

செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தை (ஏ.ஐ.) வரிச்சட்டங்களில் அமலாக்க வேண்டும் என அக்ரி மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ரத்தினவேலு தெரிவித்துள்ளார்.

அக்ரி மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ரத்தினவேலு
அக்ரி மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ரத்தினவேலு (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 2, 2025, 9:17 PM IST

மதுரை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (Union Budget) நேற்று (பிப்ரவரி 1) சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில், நிதுத்துறை, வேளாண்மை, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, நிதித்துறை, வரி, முதலீடுகள் தொடர்பான பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், இந்த பட்ஜெட் குறித்து வர்த்தக அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். இந்த பட்ஜெட்டில் வேளாண் மற்றும் தொழில் துறை சார்ந்த பல்வேறு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அக்ரி மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ரத்தினவேலு ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

ரத்தினவேலு பேட்டி (ETV Bharat Tamilnadu)

அப்போது பேசிய வார், “2024-2025ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை நேற்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். முதன்மை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரராவ், தொழில் துறையில் நிலவுகின்ற பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி அவர்கள் தங்களது தொழில் வளர்ச்சியிலும், அதன் விரிவாக்கத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால், நேற்று சமர்ப்பிக்கப்பட்ட 2025 - 2026ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட்டில், அப்பரிந்துரை ஏற்கப்பட்டு எந்த அறிவிப்பும் செய்யப்படாதது அக்ரி மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கத்திற்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கடந்த 3 ஆண்டுகளாக 7 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருந்தது. ஆனால், நடப்பு ஆண்டில் 6.4 விழுக்காடாகக் குறையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 விழுக்காடாக இருந்தால்தான், 2047-இல் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாறும் என்ற பிரதமரின் கனவு இலக்கை அடைய முடியும்.

இதையும் படிங்க :மத்திய பட்ஜெட் 2025: கோவை தொழில் துறையினரின் ஆதரவும் அதிருப்தியும்.. எதிர்பார்ப்புகள் என்ன?

இந்த சூழ்நிலையில் நமது பொருளாதாரத்தில் ஒரு தேக்கநிலைதான் நிலவுகின்றது. மக்கள் கையில் பணப்புழக்கம் இல்லாத காரணத்தால் அவர்கள் தங்களது கொள்முதலை நிறுத்திவிட்டனர். இந்த சூழ்நிலையில் பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ள பல பரிந்துரைகளை இந்த பட்ஜெட்டில் நாங்கள் எதிர்பார்த்தோம்.

குறிப்பாக, வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துவதற்குகூட 'மார்க்கெட் செஸ்' போன்ற கட்டுப்பாடுகள், சுற்றுச்சூழல் துறையின் உரிமம் எடுக்க உள்ள சிக்கல்கள், உணவுப் பொருள் தரக்கட்டுப்பாட்டுச் சட்டத்தை அமல்படுத்துவதில் நிலவும் சிக்கல்கள், அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ், உற்பத்திப் பொருட்கள் கட்டுப்பாடுகள் என பல்வேறு சட்டங்கள் விதிக்கப்படுகின்றன.

கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்:

இதனால், குறு, சிறு, நடுத்தர தொழில் வணிகம் மிகவும் சோர்வடைந்து தங்களது வணிகத்தைக் குறைத்துக் கொள்கிறார்கள் அல்லது வணிகத்தையே நிறுத்தி விடுகிறார்கள். குறு, சிறு, நடுத்தர தொழில் வணிகத்துறை நமது நாட்டின் முதுகெலும்பாகும். அது வளர்ச்சியடைந்தால்தான் நமது பொருளாதாரமும் வளர்ச்சி பெறும். ஆகையால் இதுபோன்ற கட்டுப்பாடுகளை எல்லாம் தளர்த்த வேண்டும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வருமானவரிச்சட்டம்:

ஜிஎஸ்டி வரிச்சட்டத்தை அமலாக்குவதில் ஒரு பயங்கரவாதம் நிலவுகிறது. தனி நபர் வருமான வரிச் சட்டத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆண்டு வருமானம் 12 லட்சம் வரை உள்ளவர்கள் வருமான வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, நடுத்தர வர்க்கத்திடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். வருமானவரிச்சட்டம் புதிதாக அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பட்ஜெட்டில் அது அடுத்த வாரமே சமர்ப்பிக்கப்படும் என கூறியிருப்பது பாராட்டிற்குரியது.

செயற்கை நுண்ணறிவை வரிச்சட்டங்களில் அமலாக்க வேண்டும்:

செயற்கை நுண்ணறிவை கல்வித்துறையில் அமல்படுத்துவதற்காக ரூ.500 கோடியில் உயர்நிலை சிறப்பு மையம் ஏற்படுத்த இருப்பதை வரவேற்கிறோம். இக்குறிப்பிட்ட செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தை வரிச்சட்டங்களில் அமலாக்க வேண்டும். அவ்வாறு செய்தால், வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகும். வணிகர் மற்றும் தொழில்துறையில் ஏற்படக்கூடிய சிரமங்களும் குறையும்.

அதுமட்டுமன்றி, வரி வருமானமும் அரசுக்கு கூடுதலாகக் கிடைக்கும். மொத்தத்தில் பொருளாதாரத் தேக்கநிலையில் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றாதது எங்களுக்கு ஓரளவு ஏமாற்றமளிக்கிறது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details