டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை இன்று (பிப்.1) தாக்கல் செய்கிறார். நேற்று (ஜன.31) ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது. வரும் பிப்ரவரி 13ஆம் தேதி வரை இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட் ஆகும்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கிடையே பட்ஜெட் உரையைத் நிர்மலா சீதாராமன் தொடங்கினார். இன்று கடும் அமளிக்கிடையே 2025-26ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மக்களவையில் தாக்கல் செய்துள்ளார். தெலுங்கு கவிதையை மேற்கோள்காட்டி பட்ஜெட் உரையை தொடங்கிய நிர்மலா சீதாராமன், “பாரதத்தை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
உலகின் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா மாறியுள்ளது. நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் வளர்ச்சிமயமாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வேளாண்மை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட 6 முக்கிய அம்சங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.
அதில் முதலீடுகள் துறையில், அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் பிராண்டபேண்ட் வசதி, செயற்கை நுண்ணறிவில் சிறப்பு மையம், அடுத்த 5 ஆண்டுகளில் 75000 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பட்ஜெட் 2025: 1.70 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டங்கள்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு! - UNION BUDGET 2025 FOR AGRICULTURE
2025-26ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முதலீடுகள் தொடர்பான அறிவிப்புகள் பின்வருமாறு
- 8 கோடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் புதிய திட்டம் அறிமுகம்
- நாடு முழுவதும் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் பிராண்டபேண்ட் வசதி
- மாணவர்களுக்கான பாடங்களை தாய்மொழியிலேயே டிஜிட்டல் முறையில் வழங்க நடவடிக்கை
- இளைஞர்களுக்கான தேசிய சிறப்பு மையங்கள் 5 இடங்களில் தொடங்கப்படும்
- ஐஐடி-களில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் 65,000-லிருந்து 1.35 லட்சமாக அதிகரிப்பு
- செயற்கை நுண்ணறிவில் சிறப்பு மையம் அமைக்கப்படும்
- அடுத்த 5 ஆண்டுகளில் 75000 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் உருவாக்கப்படும் - நடப்பு ஆண்டில் 10000 இடங்கள் உருவாக்கப்படும்
- அனைத்து சுகாதார மையங்களிலும் பிராண்ட் பேண்ட் வசதி செய்து தரப்படும்
- அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் பகல் நேரப் பராமரிப்பு புற்றுநோய் மையம் அமைக்கப்படும்
- ஜல் ஜீவன் திட்டம் 2028 வரை நீட்டிப்பு
- அடுத்த மூன்று ஆண்டுகளில், அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையங்களை அமைக்கப்படும்
- நகர்ப்புற மேம்பாட்டுக்காக ₹1 லட்சம் கோடியில் புதிய திட்டம்
- மின்சார தேவையை சமாளிக்க 2047 ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி அவசியம்
- அணுசக்தி மின்சார தயாரிப்பு திட்டங்களுக்காக ரூ.20,000 கோடி
- ரூ.25,000 கோடியில் கடல்சார் மேம்பாட்டு நிதி - இதில் 49 சதவீதம் மத்திய அரசு, 51 சதவீதம் கப்பல் நிறுவனங்களும் வழங்கும்
- பீகாரில் பசுமை விமான நிலையம் அமைக்கப்படும்
- 4 கோடி கூடுதல் பயணிகளுக்காக மாற்றியமைக்கப்பட்ட உதான் திட்டம் தொடங்கப்படும்
- மாநில அரசுகளுடன் இணைந்து புதிதாக 50 சுற்றுலா மையங்கள் அமைக்கப்படும்
- மருத்துவ சுற்றுலாவுக்கு உதவும் வகையில் விசா விதிகள் எளிமைப்படுத்தப்படும்
- தனியார் துறையின் உதவியுடன் மருத்துவ சுற்றுலா ஊக்குவிக்கப்படும்
- பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் National Geo-Spatial Mission அறிமுகம்