டெல்லி: இன்று முதல் (அக்.1) வணிக ரீதியான எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்த்தப்படுவதாக எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களிடம் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்க்ள் சிலிண்டர்கள் விலையை மாற்றியமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. அதன்படி, 19 கிலோ வணிக எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.48.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு காரணமாக, டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1,691.50-இல் இருந்து தற்போது ரூ.1,740ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல, 5 கிலோ இலவச வர்த்தக சிலிண்டர் விலையும் ரூ.12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால், உணவகங்கள் மற்றும் தினசரி செயல்பாடுகளுக்கு சிலிண்டர்களை உபயோகப்படுத்தும் பிற வணிக நிறுவனங்கள் நேரடியாக பாதிப்பைச் சந்திக்கும்.
இதையும் படிங்க:'ஆட்சியில் பங்கு'.. அமைச்சரவையில் 4 பட்டியலின அமைச்சர்கள்.. திருமாவளவனின் ரியாக்ஷன் என்ன?
கடந்த மாதம், செப்டம்பர் 1ஆம் தேதி, எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், 19 கிலோ வணிக எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலையை ரூ.39 ஆக உயர்த்தின. இந்த உயர்வுக்குப் பிறகு, டெல்லியில் 19 கிலோ எல்பிஜி சிலிண்டரின் சில்லறை விற்பனை விலை ரூ.1,691.50 ஆக இருந்தது. இது தற்போது ரூ.1,740ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை மாற்றம் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்கள் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், வணிக ரீதியான சிலிண்டர்கள் விலை உயர்வால் பாதிக்கப்படும் துறைகளின் செலவுகள் உயர்ந்து, நுகர்வோர் விலை உயர்வுக்கு வழி வகுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்