சென்னை: என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவிற்கு தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில் 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். ரவுடி சீசிங் ராஜாவுக்கு சொந்தமான சென்னை சேலையூரில் உள்ள வீடு மற்றும் அவர் தொடர்புடைய 10 இடங்களில் காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை 6:00 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கடனை அடைக்க மூதாட்டியின் 4 சவரன் தாலியை பறித்துச் சென்ற இளைஞர் கைது!
இந்த நிலையில், சீசிங் ராஜா மீது பல்வேறு கொலை வழக்குகள் உட்பட 39க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தன. சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது ஆயுத தடைச் சட்டம், ஆட்களை கடத்தி தாக்குதல், கட்டப்பஞ்சாயத்து செய்து நிலங்களை வாங்குவது என பல வழக்குகளும் நிலுவையில் இருந்ததன. எனவே, பல்வேறு வழக்குகளில் தமிழ்நாடு போலீசார் தேடி வந்ததால் அவர் ஆந்திராவில் தலைமறைவாக இருந்தார்.
தனிப்படை போலீசார் ஆந்திராவில் பதுங்கியிருந்த சீசிங் ராஜாவை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். சென்னையில் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிய போது போலீசார் என்கவுண்டர் செய்தனர். இதில் அவர் உயிரிழந்தார். இந்நிலையில் கூலிப்படைகளுக்கு பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக சீசிங் ராஜா தொடர்புடைய இடங்களில் வருவாய்துறை, போலீசார் சோதனை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த சோதனையானது சீசிங் ராஜாவிற்கு நெருக்கமானவர்கள் மற்றும் தொடர்புடையவர் உள்ள இடங்களில் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதன் அடிப்படையில் சென்னை, தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் 10க்கும் மேற்பட்ட இடத்தில் சோதனை செய்து வருகின்றனர். மேலும் நீதிமன்ற உத்தரவின் பெயரில் இந்த சோதனை நடத்தப்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்