ஆந்திரா:தேர்தலில் இவிஎம் இயந்திரம் பயன்படுத்துவது தொடர்பாக டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும், ஏனெனில் மனிதர்கள் அல்லது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் அவைகளை ஹேக் செய்யப்படுவதற்கான ஆபத்து உள்ளது என்று எலான் மஸ்க் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில், எலான் மஸ்க் கருத்துக்கு பல்வேறு தர்ப்பில் இருந்தும் ஆதரவுகள் எழுந்து வருகின்றன. காங்கிராஸ் தலைவர் ராகுல் காந்தி, இவிஎம் இயந்திரம் கருப்பு பெட்டி போல் மர்மமாக உள்ளதாகவும், தேர்தல் நடைமுறைகள் வெளிப்படைத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்த வரிசையில், ஆந்திர பிரதேசம் முன்னாள் முதலமைச்சரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி தேர்தலில் வாக்குச் சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஜனநாயகம் மேலோங்குவது மட்டுமின்றி அது சந்தேகத்திற்கு இடம் அளிக்காத வகையில் நடைமுறையில் இருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.