சென்னை:75வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "தமிழகத்தின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். இந்த நன்நாளில் நமது நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு எனது நெஞ்சார்ந்த அஞ்சலி மற்றும் வீரவணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், நமது நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை ஆகியவற்றை பாதுகாத்து, சமூக நல்லிணக்கத்தை உறுதிசெய்ய தங்கள் இடைவிடாத விழிப்பு, வீரம் மற்றும் தியாகங்களால் சேவை செய்யும் நமது ஆயுதப் படைகள், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் காவல் துறையின் வீரம் மிக்க படை வீரர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த மரியாதையை செலுத்துகிறேன்.
மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தன்னலமில்லா மீட்பு மற்றும் நிவாரணம் வழங்கிய தன்னார்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குறிப்பாக் மீனவர்கள் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா-எல்1 ஆகிய விண்கலன்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய நமது விஞ்ஞானிகள் மீது தேசம் கொண்டுள்ள பெருமித்தை பகிர்ந்து கொள்கிறேன். சர்வதேச விளையாட்டுகளில் பதக்கங்களை வென்று சாதனைப் படைத்து, நம் நாட்டிற்கு பெருமை சேர்த்த சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை நான் பாராட்டுகிறேன்" எனத் தெரிவித்தார்.
பாரதம் படைத்த சாதனைகள்:தொடர்ந்து கடந்த ஆண்டு இந்தியா படைத்த சாதனைகளை குறித்து பேசிய அவர், "உலக அளவில் பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வருவது நமது நாடு. உலக பொருளாதார தரத்தில் 10வது இடத்தில் இருந்து 5வது பெரிய இடத்திற்கு முன்னேறியுள்ளது. விரைவில் 3வது இடத்தையும் எட்டவுள்ளது.
நமது நாட்டில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். சொந்தமாக 5G இணைய சேவையை அறிமுகப்படுத்திய வெகுசில நாடுகளில் நமது நாடும் ஒன்றாகியுள்ளது. நமது நாட்டில் முதன் முறையாக தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை கடற்படையில் சேர்ததன் மூலம், உலகின் சக்திவாய்ந்த கடற்படைகளுள் நாமும் ஒன்றாகியுள்ளோம்.
மேலும், வரலாற்றுச் சிறப்பாக நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், நமது நாட்டின் ஜனநாயக ஆட்சியில் பெண்களை பெருமளவில் பங்கேற்கச் செய்து, உயர்ந்த அளவில் பெண்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ள நாடாக திகழ்கிறது" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "நமது நாட்டு மக்கள் அனைவருக்கும் உலகளாவிய சுகாதாரம், கல்வி, குடிநீர், சமையல் எரிவாயு, கழிப்பறை, மின்சாரம் மற்றும் டிஜிட்டல் இணைப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. குறிபாக வீடற்ற ஏழை மக்களுக்காக 40 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. நமது நாட்டின் டிஜிட்டல் வளர்ச்சி, பல வளர்ந்த நாடுகள் வியக்கும் வகையிலும், வளர்ந்து வரும் நாடுகளுக்கு முன்னுதாரணமாகவும் மாறியுள்ளன.
மேலும், 2022ஆம் ஆண்டில், தமிழ்நாடு உலக செஸ் ஒலிம்பியாட்-ஐ சிறந்த முறையில் நடத்தியதன் மூலம், சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கான நமது திறன் வெளிப்பட்டது. குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த நமது இளம் விளையாட்டு வீரர்கள் சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுகளில் பதக்கங்களை வென்று நாட்டிற்கும், மாநிலத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
அந்தவகையில், ஆர்.பிரக்ஞானந்தா, வைஷாலி ரமேஷ்பாபு, மாரியப்பன் தங்கவேலு, தீபிகா பல்லிகல், ஜோஷ்னா சின்னப்பா, சி.ஏ.பவானி தேவி, ஷரத் கமல், சத்தியன் ஞானசேகரன் ஆகியோர் குறிப்பிடத்தக்க வீரர்கள். மேலும், இவர்கள் இந்தியாவை 2047ஆம் ஆண்டிற்குள் விளையாட்டு துறையில் சிறந்த நாடாக மாற்றும் நாயகர்களாகவும் உள்ளனர்" எனப் புகழந்தார்.
உத்வேகம் அளித்த ஸ்ரீராம் லல்லா:தொடர்ந்து அய்யோத்தி ராமர் கோயில் குறிந்த்து கூறும் போது, "அயோத்தியில் உள்ள பிரமாண்டமான ராமர் கோயிலில், ஸ்ரீ ராம் லல்லாவின் பிராண பிரதிஷ்டை சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு, ஒட்டுமொத்த தேசத்தையும் உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும், நமது நாட்டை வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்க புதிய ஆற்றலையும் புகுத்தியுள்ளது.
ஸ்ரீராமருக்கு தமிழ்நாட்டுடன் ஆழமான தொடர்பு உள்ளது. ஸ்ரீராமனின் புராணத்தை சமஸ்கிருதத்திற்கு பிறகு, இந்தியாவின் மற்ற மொழிகளில் சொல்லப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே, தீவிர ராம பக்தரும், கவிஞருமான கம்பர் தமிழில் 'இராமவதாரம்' என தலைப்பிட்டு எழுதியது தமிழ்நாட்டில்தான்.