தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உ.பியின் சம்பல் பகுதிக்கு செல்ல தடை...."பாஜக என்னை பார்த்து பயப்படுவது ஏன்?" என ராகுல் கேள்வி!

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் வன்முறையால் பாதிக்கப்பட்டோரை சந்திக்கச் சென்றபோது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். இதையடுத்து தம்மை பார்த்து பாஜக ஏன் பயப்படுகிறது என்று ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

உ.பியின் சம்பல் பகுதிக்கு செல்ல ராகுல் செல்ல தடை
உ.பியின் சம்பல் பகுதிக்கு செல்ல ராகுல் செல்ல தடை (image credits-PTI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 19 hours ago

புதுடெல்லி:உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதிக்கு செல்ல போலீசார் அனுமதி அளிக்காத தால் வேறு வழியின்றி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், வயநாடு எம்பி பிரியங்கா காந்தி ஆகியோர் டெல்லி திரும்பினர்.

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் மசூதி ஒன்றில் கோவில் இருந்தது குறித்து தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டது. இந்த விவகாரம் தொடர்பாக அங்கு வன்முறை நேரிட்டதில் ஐவர் உயிரிழந்தனர். எனவே அந்த பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று உபி அரசு கூறியுள்ளது. இந்நிலையில் சம்பல் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று அங்கு சென்றார். அப்போது அவரை டெல்லி-காசியாபாத் இடையேயான தேசிய நெடுஞ்சாலை 9ல் போலீசார் தடுத்து நிறுத்தினர். காவலை மீறி அவர் சம்பல் பகுதிக்கு சென்று விடக் கூடாது என்பதற்காக ஏராளமான தடுப்புகள் வைக்கப்பட்டு தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது. மேலும் ஏராளமான போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

இதையும் படிங்க:தென்கொரிய அதிபரின் அவசர நிலை பிரகடனத்தை ரத்து செய்த எதிர்க்கட்சிகள்...அதிபரை பதவி நீக்கும் தீர்மானமும் தாக்கல்!

மேலும் ராகுல் காந்தியுடன் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் வந்ததால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் நேரிட்டது. ராகுல் காந்தியை சம்பல் பகுதிக்கு அனுமதிக்கும்படி காங்கிரஸ் நிர்வாகிகள் போலீசாரிடம் கடும் வாக்குவாத த்தில் ஈடுபட்டனர். ஆனால், போலீசார் பிடிவாதமாக மறுத்து விட்டனர். எனவே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் டெல்லி திரும்பினர்.

இது குறித்து தமது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி,"சம்பல் பகுதிக்கு செல்ல காவலர்கள் அனுமதிக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அங்கு செல்வதற்கு எனக்கு உரிமை உள்ளது. அது என்னுடைய கடமையும் கூட. எனினும் நான் தடுத்து நிறுத்தப்பட்டேன். நான் தனியாக அங்கு செல்ல நினைத்தேன். ஆனால், அதற்கும் போலீசார் அனுமதி தரவில்லை. இது அரசியல் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கையாகும். பாஜக ஏன் அச்சப்படுகிறது. தன் தோல்விகளை மறைக்க காவல்துறையினரை பாஜக பயன்படுத்துகிறது. பாஜக அரசு உண்மை மற்றும் சகோதரத்துவத்தை ஏன் ஒடுக்க முயற்சிக்கிறது?,"என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details