புதுடெல்லி:மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்து பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி தாக்கல் செய்துள்ள மனு மீது மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் கருத்துத் தெரிவிக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது.
புதுடெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் நீதிபதி பக்ரு மற்றும் நீதிபதி கெடேலா ஆகியோர் கொண்ட அமர்வு, ராகுல் காந்தி குடியுரிமை தொடர்பான விவகாரத்தில் தொடர்புடைய மத்திய அரசின் அதிகாரிகளிடம் அரசின் நிலைப்பாட்டை பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி மத்திய அரசின் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டது.
"இந்த விவகாரத்தில் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்கும் முன்பு, அரசு வழக்கறிஞரிடம் இருந்து அரசின் நிலையை அறிய விரும்புகின்றோம்,"என வாய்மொழி உத்தரவில் குறிப்பிட்டனர். வழக்கு தொடுத்திருக்கும் சுப்ரமணியம் சுவாமி, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பும்படி கோரிக்கை விடுத்தார். இதையடுத்து கருத்துத் தெரிவித்த நீதிபதிகள்,"அவர்களின் (மத்திய அரசு) நிலைப்பாடு என்ன என்பதை பார்க்க வேண்டும். அதன் பின்னர், தேவைப்பட்டால் அவர்களின் பதில் பெறப்படும்,"என்று கூறினர்.
இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் சுப்ரமணியன் சுவாமி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சத்யா சபர்வால், "கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி, அமைச்சகத்துக்கு கடிதம் எழுதப்பட்டது. அதில், தாம் பிரிட்டிஷ் பாஸ்போர்ட் வைத்திருப்பதாகவும் பிரிட்டிஷ் அரசிடம் தாமாக முன் வந்து தாம் ஒரு பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவர் என்று ராகுல் காந்தி கூறியதாக," சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.