மேற்கு வங்கம் :மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சி இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை, எதிர்வரும் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்றும் அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் அதிகபட்சம் 2 இடங்கள் மட்டுமே மக்களவை தேர்தலில் அக்கட்சி ஒதுக்க முடியும் என மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வீழ்த்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி மும்முரம் காட்டி வருகின்றன. இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக மல்லிகார்ஜூன கார்கே நியமிக்கப்பட்டு உள்ள நிலையில், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிர கட்டத்தை அடைந்து உள்ளன.
தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு குறித்து ஒருமித்த கருத்து நிலவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படப் போவதில்லை என்றும் எதிர்வரும் மக்களவை தேர்தலை தனித்து எதிர்கொள்ள உள்ளதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார்.
மேற்கு வங்கத்தில் தனித்து போராடுவோம் என்று தான் தொடர்ந்து கூறி வந்ததாகவும், நாட்டில் என்ன நடக்கும் என்பது பற்றி தனக்கு கவலை இல்லை ஆனால் தங்கள் தரப்பு மதச்சார்பற்ற கட்சி, மேற்கு வங்கத்தில் பாஜகவை மட்டும் தோற்கடிப்போம் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.