டெல்லி :நதிகள் இணைப்பு, பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மத்திய அரசு தங்களது பிரச்சினைகளை காது கொடுத்து கேட்காத பட்சத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக மக்களவை தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக தமிழக விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.
தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஏற்த்தாழ 200 தமிழக விவசாயிகள் மத்திய அரசின் மீதான தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எலும்புகள் மற்றும் மண்டை ஓடுகளுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பெண்கள் அங்கிருந்த மரங்களில் ஏறி தற்கொலை செய்து கொள்ள உள்ளதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை பத்திரமாக மீட்டனர். விவசாய வருவாயை மூன்று மடங்காக உயர்த்துவதாக உறுதி அளித்த மத்திய அரசு அதை இதுவரை செய்யவில்ல என்றும், பயிர்களின் விலை உயரவில்லை என்றும் விவசாயிகள் கூறினர்.