தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வயநாடு மக்களவை இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தியின் தேர்தல் வியூகம் பலிக்குமா? - WAYANAD LOK SABHA BY ELECTION

கேரளா மாநிலம் வயநாடு தொகுதியின் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அங்கு காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் பிரியங்கா காந்தியின் தேர்தல் வியூகம் குறித்த சிறப்பு தொகுப்பு.

Priyanka Gandhi during a roadshow in Wayanad
பிரியங்கா காந்தி (Credits - ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 12, 2024, 10:38 PM IST

கேரளா (வயநாடு): நாடு முழுவதும் நடைபெற்ற 2024 மக்களவைத் தேர்தலில், ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றார். ஒரு தொகுதியில் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினராக தொடர முடியும் என்ற தேர்தல் ஆணைய விதிமுறைப்படி, வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி.

அதனைத் தொடர்ந்து, வயநாடு தொகுதி காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டு, நவ.13ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். இந்த நிலையில், ராகுல் காந்தி ராஜினாமா செய்த தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அவரது தங்கை பிரியங்கா காந்தி களமிறங்கியுள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது.

உணர்வுப்பூர்வமான தொடர்பில் கவனம்: பிரியங்கா காந்தி தனது பிரச்சாரத்தில் அரசியல் தாக்குதல்கள் பற்றி குறைவாகவே கவனம் செலுத்தினார். ஆனால் அதேசமயம் வாக்காளர்களுடனான உறவுகளை பலப்படுத்துவதையும், அவர்களுடன் உணர்வுப்பூர்வமான தொடர்பை ஏற்படுத்துவதையும் தனது மிக முக்கியமான நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார்.

இந்த செயல்பாடு, அடிமட்ட கட்சி ஊழியர்களின் மன உறுதியை உயர்த்தியது என்றும், காங்கிரஸ் அடித்தளத்தில் ஆற்றலை அதிகரித்ததோடு இந்த தேர்தலில் பிரியங்கா காந்தி அமோக வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மாறுபட்ட அணுகுமுறை: "பிரியங்கா காந்தி வயநாட்டிற்கு அடிக்கடி வருகை தந்தது உள்ளூர் பொது மக்களுடன் தொடர்பு கொள்வதற்கான வழிகளை எளிதாக்கியது. மேலும் அவர் பிரச்சாரத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தொழிலாளர்களுடன் இருந்தார்" என்று கல்பெட்டா சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் தலைவருமான டி.சித்திக் கூறினார்.

மேலும், "ராகுல் காந்தி தனது முந்தைய தேர்தல் பிரச்சாரங்களில் தொகுதியில் செய்த விசயங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு தனக்கான பாணியை ஏற்படுத்தியது ஒரு பெரிய மாற்றத்தை பிரதிபலித்தது. இருப்பினும், அத்தொகுதியில் உள்ள பாஜக மற்றும் சிபிஐ கட்சியினர் பிரியங்காவின் அணுகுமுறையை விமர்சித்தனர்" என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:மின்கட்டண குறைப்பு.. மதமாற்ற தடைச் சட்டம்.. மகாராஷ்டிரா தேர்தல் பாஜகவின் அதிரடி வாக்குறுதிகள்!

பாஜக-வின் பார்வையில் பிரியங்கா: "சுற்றுலாப் பயணிகளைப் போல வந்து செல்லும் எம்பி "வயநாட்டிற்கு தேவையில்லை. அண்ணனுக்குப் பதிலாக தங்கை என்ற அடிப்படையில் தேர்தலில் செயல்படுவது வயநாட்டின் வாக்காளர்களை காங்கிரஸ் கேலி செய்வதுபோல் உள்ளது.

வனவிலங்கு தாக்குதல்கள் மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சினைகள் போன்ற உள்ளூர் பிரச்சினைகளுக்கு, நீண்டகால தீர்வுகளை பாஜக தரும் என்று உறுதியளிக்க முடியும்" என பாஜக தலைவர் சதானந்தன் உள்ளிட்ட பாஜக-வின் மூத்த நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு உறுதியளித்துள்ளனர்.

இடதுசாரிக் கட்சி: சிபிஐ தலைவரும், ராஜ்யசபா எம்.பி-யுமான பி.சந்தோஷ் குமார் கூறுகையில், "இதற்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ராகுல் காந்தி வயநாடு மக்களின் பிரச்சினைகளில் அலட்சியமாக இருந்தார். பிரியங்கா மற்றும் ராகுல் இருவருக்குமே வயநாட்டின் நீண்டகால வளர்ச்சியை உறுதி செய்வதற்கான அர்ப்பணிப்பு இல்லாதிருக்கிறது" என்று விமர்சித்துள்ளார்.

ஆபத்தான உத்தி: அரசியல் ஆய்வாளர் ஸ்வேதா மோகன் கூறுகையில், "பிரியங்காவின் பிரச்சாரமும், பேச்சுகளும் குறிப்பிடத்தக்க வகையில் காதல், ஒற்றுமை மற்றும் பச்சாதாபத்தின் கருப்பொருள் என உணர்வுப்பூர்வமானதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பிரசாரத்தின் இறுதிக்கட்டத்தில்' ஐ லவ் யூ வயநாடு' என எழுதப்பட்ட டி-ஷர்ட்டை ராகுல் காந்தி அணிந்திருந்ததும் கூட வயநாட்டின் வாக்காளர்களின் இதயங்களைச் சென்றடைந்து புத்துணர்ச்சியூட்டும். ஆனால், அதே சமயம் இது ஆபத்தான உத்தியாகவும் இருக்கலாம்.

அதேபோல, பிரியங்காவின் பிரச்சாரம் வழக்கத்திற்கு மாறானது. ஏனெனில், இது அரசியலை தாண்டி தனித்துவமானது. ஆனால், பிரச்சாரக் கூட்டங்கள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகளைத் தாண்டி இந்த அணுகுமுறை வெற்றி பெறுமா என்பதில்தான் ஆபத்து இருக்கிறது. வயநாடு போன்ற வனவிலங்கு பிரச்சனைகள், குறைந்த வேலை வாய்ப்புகள் போன்ற சவால்களை எதிர்கொள்ளும் தொகுதிகளில், பேரிடர் மேலாண்மையை கருத்தில் கொள்ளும்போது வாக்காளர்கள் உணர்வுகளை விட பொருளுக்குத்தான் முன்னுரிமை அளிக்கும் வாய்ப்புள்ளது" என்று எடுத்துரைத்தார்.

சென்டிமென்ட் ஜெயிக்குமா?: "வயநாட்டின் வாக்காளர்கள் வாக்களிக்கத் தயாராகி வரும் நிலையில், பிரியங்காவின் அணுகுமுறை வாக்குகளாக மாறுமா? என்பது ஒரு கேள்வியாகவே உள்ளது. ஆனால், இந்தியாவின் மாறிவரும் அரசியல் நிலப்பரப்பில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்காவின் இந்த பிரச்சார உத்தி குறிப்பிடத்தக்கதாக தெரிகிறது. இன்னும் பத்து நாட்களில் வரவிருக்கும் முடிவுகள், வயநாடு 'சென்டிமென்ட்' மீது நம்பிக்கை வைக்கத் தயாராக இருக்கிறதா? அல்லது 'பொருள்' இறுதியில் முடிவை மாற்றுமா? என்பது தெரிந்துவிடும்" என்று அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details